`தமிழ்நாடு' வார்த்தையை தவிர்த்த ஆளுநர்; முதல்வர் ஸ்டாலின் காட்டிய அதிரடி: பேரவையில் நடந்தது என்ன?

`தமிழ்நாடு' வார்த்தையை தவிர்த்த ஆளுநர்; முதல்வர் ஸ்டாலின் காட்டிய அதிரடி: பேரவையில் நடந்தது என்ன?

தமிழ்நாடு, திராவிட மாடல் ஆட்சி போன்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநரின் உரையை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, ஆளுநர் திருத்தி வாசித்த உரையானது அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உடையுடன் இன்று காலை தொடங்கியது. அப்போது ஆளுநர், தமிழக அரசு கொடுத்த உரையை வாசிக்காமல் அதை தவிர்த்தார். தமிழ்நாடு, திராவிட மாடல், பெரியார், அறிஞர் அண்ணா போன்ற வார்த்தைகளை அவர் தவிர்த்து உள்ளார். குறிப்பாக ஆளுநர் உரையின் 3-வது பக்கத்தில், ``இந்த வளர்ச்சி பயணத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அயராத உழைப்போடும் அக்கறையோடும் இந்த அரசு வழிநடத்தி வந்துள்ளார்கள்.

இந்த வகையில் அண்மையில் இந்தியா டுடே பத்திரிகை நடத்திய மாநிலங்களின் நிலை என்ற ஆய்வு சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலங்களில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்று முடிவு செய்துள்ளது. இந்த சாதனை நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆற்றல் மிக்க தலைமைக்கும் சமூக நீதியையும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்ட திராவிட மாடல் ஆட்சிக்கும் அளிக்கப்பட்டுள்ள நற்சான்றிதழாகும்" என்று கூறப்பட்டுள்ளது. இதிலுள்ள வார்த்தைகள் சிலவற்றை ஆளுநர் தனது உரையி உச்சரிக்காமல் தவிர்த்தார்.

இதையடுத்து, சபாநாயகர் ஆளுநர் உரையை தமிழில் வாசித்தார். அவர் வாசித்து முடித்தப்பின்னர் முதல்வர் ஸ்டாலின் திடீரென எழுந்து, “தமிழக அரசால் அச்சடித்துக் கொடுக்கப்பட்ட உரையை முறையாக படிக்காத ஆளுநர் கூறிய வார்த்தைகளை அவை குறிப்பில் சேர்க்கக்கூடாது என்றும் தமிழக அரசு அச்சிட்டுக் கொடுத்த உரையே ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும் என்று நான் முன்மொழியும் தீர்மானத்தை பேரவையில் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

முதல்வர் தீர்மானத்தை வாசித்து முடித்த உடன் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து திடீரென வெளியேறினார். அப்போது, ஆளுநருக்கு எதிராக திமுக உறுபினர்களும் திமுக கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் முழக்கமிட்டனர். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, தமிழக அரசு அச்சிட்டுக் கொடுத்த ஆளுநர் உரை மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

சட்டப்பேரவைக்கு வெளியில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் முரண்பாடு ஏற்பட்டுவந்த நிலையில் தற்போது சட்டப் பேரவைக்குள் மோதல் ஏற்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in