நாட்டிலேயே முதல் சர்வதேச அறைகலன் பூங்கா

மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்: 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
நாட்டிலேயே முதல் சர்வதேச அறைகலன் பூங்கா

தூத்துக்குடியில் நாட்டிலேயே முதல் சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் அடிக்கல் நாட்டினார். இந்த சர்வதேச அறைகலன் பூங்காவில் முதல்கட்டமாக எட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க, 2845 கோடி ரூபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேபோல் தமிழகம் முழுவதும் தொழில் தொடங்க 4755 கோடி மதிப்பீட்டில், 33 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

ஸ்பிக் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஸ்பிக் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி சிப்காட்டில் பர்னிச்சர் பூங்கா திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1000 கோடி செலவில் 1,150 ஏக்கர் பரப்பளவில் இந்த சர்வதேச பூங்கா அமைகிறது. தூத்துக்குடியில் இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘நாள் தோறும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஓய்வின்றி செயலாற்றி வருகிறோம். மக்களிடம் செல், மக்களோடு வாழ் என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறோம். நிதி நிலை எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி தொழில்முனைவோர் உடன் கலந்து பேசி மக்கள் நலன் காக்கும் அரசாக நமது அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக சர்வதேச அறைகலன் பூங்கா அமையபோகிறது என்னும் பெருமை தூத்துக்குடிக்கு கிடைத்திருக்கிறது.

தென் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாகவும், பொருளாதாரத்தை உயர்த்தும் விதமாகவும் தூத்துக்குடியில் இந்த சர்வதேச அறைகலன் பூங்கா துவங்கி உள்ளோம். மாநிலத்தின் மகத்தான வளங்களை பயன்படுத்தி, தொழில்வளத்தை அதிகப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர்வளம் நிறைந்த வேளாண் நிலமாகவும், தமிழர்களின் பாரம்பரியம், பண்பாட்டை பிரதிபலிக்கும் விதமாகவும் தூத்துக்குடி விளங்குகிறது. தென்மாவட்டங்களில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக தொழில்பூங்காகளில் 50 விழுக்காடு மானியத்துடன் இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. முதலீடுகளை வளர்க்க மாநிலம் முழுவதும் சீரான தொழில்வளர்ச்சியை மேம்படுத்த இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

இதேபோல், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நீர் கிடைத்திட தினமும் 30 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த சிப்காட் மூலம் திட்டமிட்டுள்ளோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் நம்பர் 1 என்ற இடத்தை விரைவில் அடையும். பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த மிகப்பெரிய நிறுவனம் 430 கோடி முதலீட்டில் கதவு ஜன்னல் உற்பத்தி ஆலையை இந்த பூங்காவில் தொடங்க முன்வந்துள்ளது.’’என்றார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் 17,476 பேருக்கு வேலைகிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னதாக ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி நிலையத்தையும் திறந்துவைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in