`என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் `ஜெய்பீம்'- முதல்வர் ஸ்டாலின்

`என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் `ஜெய்பீம்'- முதல்வர் ஸ்டாலின்

"என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் ஜெய்பீம். அந்த படம் பலரது மனசாட்சியை உலுக்கியது" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, முத்தமிழ்ப் பேரவையின் 41-ம் ஆண்டு இசை விழாவில், இயல் செல்வம் விருதினை த.செ. ஞானவேலுக்கும், இசை செல்வன் விருதினை ராஜ்குமார்பாரதிக்கும், ராஜ ரத்னா விருதினை பத்மஸ்ரீ ஷேக் மெஹபூப் கபானி மற்றும் பத்மஸ்ரீ திருமதி காலீஷாபி மெஹபூப் ஆகியோருக்கும், நாட்டிய செல்வன் விருதினை பத்மபூஷன் வி.பி.தனஞ்சயன் மற்றும் பத்மபூஷன் திருமதி சாந்தா தனஞ்செயன் ஆகியோருக்கும், நாதஸ்வர செல்வம் விருதினை நாகேஷ் ஏ.பப்புநாடுக்கும், தவில் செல்வம் விருதினை பா.ராதாகிருஷ்ணனுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதன் பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இசையை காக்க இயக்கம் நடத்திய மாநிலம் தமிழ்நாடு. எத்தனை இசை வளர்ந்தாலும் அவை அனைத்தும் தமிழ் இசையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தை பார்க்க வேண்டும் என சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார். படத்தை பார்த்துவிட்டு மூன்று நாட்கள் தூங்கவே இல்லை. எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய்பீம் படம் பலரின் மனசாட்சியை உலுக்கியது. ஜெய்பீம் படத்தில் வரும் சிறைச்சாலை, சித்ரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன். அதனால் மற்றவர்களை விட என்னை அந்த படம் கூடுதலாக பாதித்தது. உண்மையில் அதை ஒரு வருடம் அனுபவித்தவன் நான். அதனால் மற்றவர்களை விட என்னை அந்த படம் கூடுதலாக பாதித்தது" என்றார்.

இந்த விழாவில் இயக்குநர் ஞானவேல் பேசுகையில், "பழங்குடி மக்கள் கால் தேய நடந்து நடந்து கிடைக்காத பட்டாவும், சான்றிதழ்களும் இப்போது அதிகாரிகள் தேடிப்போய் அந்த மக்களுக்கு தருகிறார்கள்; இதெல்லாம் ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு முதல்வர் இட்ட உத்தரவால்தான். எனவே, பழங்குடி மக்கள் சார்பாக அவருக்கு நன்றி" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in