பாஜகவில் ஒரு தொகுதிக்காக ஒரே குடும்பத்தில் இருவர் குறி!

மகளுக்கு கிடைத்ததால் சமாஜ்வாதியில் இணைந்து களமிறங்கும் தந்தை
மகள் ரியா ஷக்கியா
மகள் ரியா ஷக்கியாhindu

உத்தரப்பிரதேசத்தின் பிதுனா தொகுதிக்கு பாஜகவில் போட்டியிட ஒரே குடும்பத்தில் கடும் போட்டி உருவாகி விட்டது. இதில், மகளுக்கு வாய்ப்பு கிடைத்ததால் அவரை எதிர்த்து போட்டியிட சமாஜ்வாதியில் இணைந்து எதிர்க்க தயாராகிறார் பாஜக எம்எல்ஏவான தந்தை.

அவுரய்யா மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவையின் மூன்று தொகுதிகளில் ஒன்று பிதுனா. இங்கு இரண்டாவது கட்டத்தில் நடைபெறும் தேர்தலில் ருசிகரமானப் போட்டி உருவாகி உள்ளது. இதில் முன்னாள் பாஜக எம்எல்ஏவான தனது தந்தை வினய் ஷக்கியாவை எதிர்க்கிறார் மகள் ரியா ஷக்கியா(25). வினய் ஷக்கியா, பாஜகவிலிருந்து சமீபத்தில் விலகிய முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் மவுரியாவிற்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர். மவுரியா பாஜகவிலிருந்து விலகியதால் ஷக்கியா குடும்பத்தில் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தன் தந்தை வினய் ஷக்கியாவிற்கு பதிலாக தனக்கு வாய்ப்பளிக்கும்படி அவரது மகள் ரியா ஷக்கியா பாஜகவில் கேட்டிருந்தார். இதில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவதில், தந்தை மற்றும் மகளுக்கு இடையே பாஜகவில் கடும் போட்டி கிளம்பியது. இறுதியில் தந்தையின் வாய்ப்பை தட்டிப் பறித்தார் மகள் ரியா ஷக்கியா. உபியின் மிகவும் குறைந்ததாக 25 வயது ரியாவிற்கு பாஜக பிதுனாவில் போட்டியிடும் வாய்ப்பை அளித்தது.

இதனால், பாஜக எம்எல்ஏவான தந்தை வினய் ஷக்கியா, சமாஜ்வாதியில் இணைந்துவிட்டார். இக்கட்சியின் தலைவரான அகிலேஷ்சிங்கிடம் தாம் பிதுனாவில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வலியுறுத்தி வருகிறார். பிதுனாவின் முக்கிய அரசியல் குடும்பத்தை சேர்ந்த வினய்க்கு அல்லது அவரது சகோதரரான தேவேஷ் ஷகியாவிற்கு சமாஜ்வாதி வாய்ப்பளிக்க உள்ளது. வினய்க்கு வாய்ப்பு கிடைத்தால் தந்தை மகளுக்கு இடையிலான போட்டியாக இது அமையும் என ஷகியா குடும்பம் மீதான வீடியோ பதிவுகள் சமூகவலதளங்களில் வைரலாகின்றன.

தந்தை வினய் ஷக்கியா
தந்தை வினய் ஷக்கியாANI

பாஜகவின் உபி அரசியல் குடும்பத்து பெண்கள்

இந்த நிகழ்வை வைத்து, உபியின் முக்கிய அரசியல் குடும்பங்களின் பெண்களுக்கு அடைக்கலம் தரும் கட்சி பாஜக என ஒரு வீடியோவும் உபியில் வைரலாகிறது. சமீபத்தில் பாஜகவில் இருந்து வெளியேறிய முக்கிய தலைவரும் கேபினேட் அமைச்சருமான சுவாமி பிரசாத் மவுரியாவின் மகள் சங்கமித்ரா மவுரியா பாஜகவில் உள்ளார். இவருக்கு உபியின் பதாயூ மக்களவை தொகுதியில் 2019 இல் வாய்ப்பளிக்கப்பட்டு எம்.பியாக சங்கமித்ரா உள்ளார்.

அதேபோல், ரெய்பரேலியின் முக்கியக் காங்கிரஸ் குடும்பத்து பெண்ணான அதித்திசிங்கிற்கு அதே தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. காங்கிரஸின் எம்எல்ஏவான அதித்திசிங், அக்கட்சியின் விரோத நடவடிக்கைகளால் விலக்கப்பட்டிருந்தார். இந்த பட்டியலில், சமாஜ்வாதி குடும்பத்தின் மருமகள் அபர்னா யாதவும் ஏற்கெனவே பாஜகவில் இணைந்திருக்கிறார். இவருக்கு லக்னோவின் ராணுவ குடியிருப்பு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in