சோதனைகள் மூலம் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை வெளிவருமா?: காத்திருக்கும் குடும்பத்தார்

சோதனைகள் மூலம் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை வெளிவருமா?: காத்திருக்கும் குடும்பத்தார்

ராமஜெயம் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்ட  12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை இன்று இரண்டாவது நாளாக  தொடர்கிறது.

திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என் ராமஜெயம் கடந்த  2012 மார்ச் 29-ம் தேதி அதிகாலை கடத்திக்  கொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கை தற்போது, எஸ்பி.செல்வராஜ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

இந்த வழக்கு தொடர்பாக தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர். இதையடுத்து   12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி ஜே.எம்- 6 நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனையடுத்து ரவுடிகளிடம் உண்மை  கண்டறியும் சோதனை நடத்த டெல்லியில் உள்ள ஆய்வகத்தில் முறைப்படியான அனுமதி பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை நேற்று தொடங்கியது.  பிரபல ரவுடிகள் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகிய 4 பேரிடம்  நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. 
ஒவ்வொருவரிடமும் சுமார் 40 நிமிடம்  சோதனை நடத்தப்பட்டது. டெல்லியில் இருந்து வந்துள்ள தடயவியல் துறை நிபுணர்கள் இந்த சோதனையை நடத்தினர்.  மோகன்ராமின் வழக்கறிஞர் ஆனந்தன், நரைமுடி கணேசனின் வழக்கறிஞர் புகழேந்தி, தினேஷின் வழக்கறிஞர் வில்லியம்ஸ் ஆகியோர் சோதனையின்போது உடனிருந்தனர்.

நேற்று நான்கு பேருக்கு சோதனை  நடத்தப்பட்ட நிலையில் இன்றும் நான்கு பேரிடம் சோதனை நடைபெறும் என்று தெரிகிறது. சாமி ரவி, மாரிமுத்து ராஜ்குமார்,  சிவா ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை இன்று நடைபெறுகிறது. லெப்ட் செந்தில், கலைவாணன், சுரேந்தர்,  திலீப் ஆகிய நால்வரிடமும் நாளை மற்றும் நாளை மறுதினம் சோதனை நடைபெற உள்ளது.

இந்த உண்மை கண்டறியும் சோதனைகள் மூலம் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை வெளிவருமா என்று அமைச்சர் நேரு  குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in