உ.பியைப் போல கர்நாடகாவிலும் மாட்டிறைச்சி அரசியல்: வியாபாரி வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு

உ.பியைப் போல கர்நாடகாவிலும் மாட்டிறைச்சி அரசியல்: வியாபாரி வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு

மாட்டிறைச்சி விற்றவரின் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தை ஆளும் யோகி தலைமையிலான பாஜக ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தைப் போல கர்நாடகாவிலும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கையை முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு பின்பற்றி வருகிறது என்ற புகாரும் எழுந்துள்ளது. கர்நாடகத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் புல்டோசர் மாடலைக் கொண்டு வர வேண்டும் என்று பாஜக மாநில செயலாளர் சி.டி.ரவி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கர்நாடகாவில் மாட்டிறைச்சி விற்பனை செய்த சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவரின் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் டவுன் தமிழ் காலனியைச் சேர்ந்தவர் சபியுல்லா இக்பால். இவர் வீட்டில் வைத்து மாட்டிறைச்சி விற்பனை செய்வதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையறிந்து நகராட்சி அதிகாரிகள் சபியுல்லா இக்பால் வீட்டிற்கு சோதனையிடச் சென்றனர். இந்த தகவலை அறிந்த சபியுல்லா அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து அவரது வீட்டில் நகராட்சி அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்கிருந்த 100 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர். அத்துடன் சபியுல்லா இக்பால் வீட்டின் மின் இணைப்பையும் துண்டித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in