தேர்தல் ஆணைய நடவடிக்கையால் டி.ராஜேந்தர் கட்சிக்கு வந்த சோதனை!

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

தொடர்ந்து 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும்  போட்டியிடாத 86 கட்சிகளின் பதிவு  அங்கீகாரத்தை அதிரடியாக  ரத்து செய்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அதில் தமிழ்நாட்டில் ஏழு கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள்  தொடங்கப்படும் போது அதை தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்டு,  அங்கீகாரம் பெறப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடும்போது கிடைக்கும் வாக்குகள் அடிப்படையில் கட்சிக்கான அங்கீகாரம் மற்றும் நிரந்தர சின்னம் ஆகியவை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும். அப்படி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்கு பதிவு செய்துவிட்டு பல கட்சிகள் அப்படியே விட்டு விடுகின்றன. தேர்தலில் போட்டியிடுவதில்லை. 

அப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது

அதாவது ஆணையத்தில் பதிவு செய்த நாளில் இருந்து தொடர்ந்து ஆறு ஆண்டுகள் ஒரு கட்சி தேர்தலில் போட்டியிடாவிட்டால், பதிவு செய்துள்ள கட்சிகளின் பட்டியலில் இருந்து அக்கட்சி நீக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 2014 முதல் 2019-ம் தேதி வரை தேர்தலில் போட்டியிடாத 86 கட்சிகளின் அங்கீகாரம் அப்படி  ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கொங்குநாடு ஜனநாயக கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காயுதே மில்லக் கழகம், தமிழர் கழகம் ஆகிய கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடிகர் டி.ராஜேந்தரின் 'இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்' செயல்படாத கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி  இந்தியா முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட லெட்டர் பேடு கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in