திமுகவினர் செய்த தந்திரம்: நொந்துபோன கம்யூனிஸ்ட் கட்சியினர்

கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக
திமுகவினர் செய்த தந்திரம்: நொந்துபோன கம்யூனிஸ்ட் கட்சியினர்

கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை திமுக கைப்பற்றியதைக் கண்டித்து அந்தியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தலைவர், துணைத் தலைவர் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. எனினும், பெரும்பாலான இடங்களில் தலைவர் பதவியை திமுகவினரே கைப்பற்றினர்.

இது திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை கைப்பற்றிய திமுகவினர், தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இச்சூழலில் தள்ளிவைக்கப்பட்ட தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.

அந்த வகையில் 2-வது முறையாக இன்று ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இப்பேரூராட்சித் தலைவர் பதவி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதனால் தலைவர் பதவிக்கு 3-வது வார்டு உறுப்பினர் எஸ்.கீதாசேகர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆனால் இதனை முன்மொழிய திமுக உறுப்பினர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் சிபிஎம் கட்சி உறுப்பினர் கீதா உள்ளிட்டோர் வெளியேறினர். இதன்பின், தந்திரமாக 15-வது வார்டு திமுக உறுப்பினர் பாண்டியம்மாள் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். போட்டியில்லாததால் அவர் பேரூராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைக்கண்டித்து அந்தியூர் ஜிஹெச் கார்னர் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி தர்மத்திற்கு எதிராக திமுகவினர் செயல்பட்டதாக கூறி கோஷம் எழுப்பப்பட்டது. அதன்பின் அவர்களாகவே கலைந்து சென்றனர்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னாலும் கேட்கமாட்டோம் என்ற மனநிலையில் திமுகவினர் இருந்தால் என்னதான் செய்வது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நொந்தபடி சென்றனர். அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அவற்றில் 13 வார்டில் திமுகவும், தலா ஒரு வார்டில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in