சட்ட நகர்வுகள் எங்களுக்கே சாதகம்; - தூதுப்படலத்தை துரிதப்படுத்தும் ஓபிஎஸ் அணி!

சட்ட நகர்வுகள் எங்களுக்கே சாதகம்; - தூதுப்படலத்தை துரிதப்படுத்தும் ஓபிஎஸ் அணி!

அதிமுக பொதுக்குழு குறித்த தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் தரப்பினர் தங்களை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மாவட்ட செயலாளர்கள் மூலமாக பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானவர்களை தன்வசம் கொண்டு வந்த ஈபிஎஸ், வானகரத்தில் ஜூன் 23 -ல் பொதுக்குழுவை கூட்டினார். அதில் வெளிப்படையாக மோதல் வெடித்ததால் அங்கிருந்து ஓபிஎஸ் தரப்பினர் வெளியேறினர். அதனால் அதற்கு முன்னதாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிந்த தீர்மானங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டது.

அதன் பிறகு மீண்டும் ஜூலை 11-ல் பொதுக்குழுவைக் கூட்டியது ஈபிஎஸ் தரப்பு. இதில், ஓபிஎஸ்சை கட்சியைவிட்டு நீக்கியும் ஈபிஎஸ்சை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், "ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லாது. அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மேல்முறையீடு செய்தார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் தீர்ப்பு ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக இருப்பதாக வெளிப்படையாகவே வாதம் செய்தது ஈபிஎஸ் தரப்பு. "தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம் என்ற தனி நபர் பயனடையும் வகையில் தான் தீர்ப்பு வழங்கியுள்ளார். 1.5 கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் அல்ல. 'கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் என கோரியதற்கு எந்தப் புள்ளிவிவரமும் இல்லை. ஒன்றரைக் கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா?’ என தனி நீதிபதி கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது.

அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது சரியல்ல. 2,539 பொதுக்குழு உறுப்பினர்களும் எங்கள் தரப்புக்கு ஆதரவு தெரிவித்து தனித் தனியாக தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் அளித்துள்ளனர். பொதுக்குழு முடிவே இறுதியானது. உள்ளாட்சி இடைத்தேர்தல் படிவத்தில் கையெழுத்திட ஓ.பன்னீர்செல்வம் மறுத்ததால் சின்னம் கிடைக்காமல் வேட்பாளர்கள் தோல்விய டைந்தனர். தனி நீதிபதி உத்தரவால் பிரதான எதிர்கட்சியாக அதிமுக செயல்பட முடியாதநிலை உள்ளது" என்று ஈபிஎஸ் தரப்பில் வாதம் எடுத்துவைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். ஏற்கெனவே தனி நீதிபதியின் தீர்ப்புக்குப் பிறகு ஓபிஎஸ் தரப்பு மிகவும் உற்சாகமாக ஆள்பிடிப்பு வேலைகளை தொடங்கியது. “ஈபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லாது, ஓபிஎஸ் தான் இப்பவும் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்” என்று சொல்லி தமிழகம் முழுவதும் ஆள்திரட்டும் வேலையை தொடங்கினார்கள். அதற்கு ஓரளவுக்குப் பலனும் கிடைத்தது.

தர்ம யுத்தத்தின் போது ஓபிஎஸ்
தர்ம யுத்தத்தின் போது ஓபிஎஸ்

இந்த நிலையில், தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதை முன்வைத்து தூதுவிடும் படலத்தை இன்னும் துரிதப்படுத்தி இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. ஏற்கெனவே இரண்டு முறை நடத்தப்பட்ட பொதுக்குழுவின் போது, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஈபிஎஸ் தரப்பில் ஏகமாய் செலவழித்ததாக சொல்லப்படுகிறது. இனியும் பணத்தைப் பூட்டிவைத்தால் வேலைக்கு ஆகாது என்பதால் ஓபிஎஸ் தரப்பும் இப்போது கல்லாப்பெட்டியைத் திறக்கும் முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி, அதற்குள் தங்கள் தரப்பை மேலும் வலுப்படுத்திக் கொண்டு தாங்கள் தான் பலமான அணி என சித்தரிக்கும் வேலையை சீராகச் செய்து கொண்டிருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. பாஜகவும் தங்களுக்கே சாதகமாக இருக்கிறது, எப்படியும் கட்சி தங்கள் கைக்குத்தான் வரும் என்றும் இவர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு, டெல்லியில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஈபிஎஸ்சை சந்திக்க மறுத்ததையும் சட்ட நகர்வுகள் தங்களுக்குச் சாதகமாகச் செல்வதையும் காரணமாக காட்டுகிறார்கள். வரப்போகும் தீர்ப்பும் தங்களுக்கு சாதமாகவே இருக்கும் என்பதையும் ஓபிஎஸ் தரப்பு ஆணித்தரமாக முன்வைத்து வருகிறது.

ஓபிஎஸ் தரப்பில் இப்படியெல்லாம் காய்நகர்த்தப்பட்டாலும் ஈபிஎஸ் தரப்பில் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். மீண்டும் அனைவரும் இணைந்து செயல்படலாம் என்று ஓபிஎஸ் விடுத்த அழைப்பைக் கடுமையாகச் சாடும் அவர்கள், “எந்த முகத்தை வைத்துக்கொண்டு இணைந்து செயல்படலாம் என்கிறார். ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு கட்சிக்குள் ஏகப்பட்ட குடைச்சல்களைக் கொடுத்த ஓபிஎஸ், தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியை நல்ல முறையில் நடத்திக் கொண்டிருக்கும் ஈபிஎஸ்சுக்கு எதிராக நீதிமன்றம் சென்று கட்சியையே முடக்கிவைத்திருக்கிறார்.

ஏற்கெனவே இப்படித்தான்11 எம்எல்ஏ-க்களை அழைத்துக் கொண்டு போய் கட்சிக்கு துரோகம் இழைத்தார். சட்டப்பேரவையில் திமுகவுடன் சேர்ந்துகொண்டு அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தார். அப்படிப்பட்ட துரோகி இப்போது, இணைந்து செயல்பட அழைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. இனி அவரோடு ஒருகாலும் இணைந்து செயல்படவே முடியாது” என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.

ஆளுக்கொன்றைச் சொல்லலாம். ஆனால், மேலே இருக்கிறவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதானே நடக்கும்; அதுதானே அண்மை வழக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in