`நீதிமன்றத்தின் தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி'- அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்

தேர்வடம் பிடித்து இழுக்கும் மனோ தங்கராஜ்
தேர்வடம் பிடித்து இழுக்கும் மனோ தங்கராஜ்

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜை, அண்மைக்காலமாக மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கி வந்தன இந்து அமைப்புகள். அவர் வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு தேரோட்டத்திற்கு வடம் பிடிக்கச் சென்றபோதே இந்து அமைப்புகள் முட்டுக்கட்டை போட்டன. அதையும் மீறி அவர் வடம்பிடித்தது அரசியல் ஆனது.

இப்போது அவரது தொகுதிக்குட்பட்ட திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதிலும்கூட இந்து அமைப்புகள் முட்டுக்கட்டைப் போட முயல, நீதிமன்றம் தலையிட்டு அதற்கு முட்டுக்கட்டை போட்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்!

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் முகப்பு
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் முகப்பு

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறில் பிரசித்திப்பெற்ற ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. 108 வைணவத் தலங்களில் ஒன்றான இந்த ஆலயத்தில் 418 ஆண்டுகளுக்குப் பின்பு வரும் 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த ஆலயம் அமைந்திருக்கும் பத்மநாபபுரம் தொகுதியின் எம்.எல்.ஏவாக அமைச்சர் மனோதங்கராஜ் உள்ளார். கும்பாபிஷேக அழைப்பிதழில் இவர் பெயரைப் பார்த்ததும் இந்து அமைப்புகள் உஷ்ணமாகின. அவரை குறிவைத்தே பிரம்மபுரம் சோமன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்துக்கள் அல்லாதோர் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்கக் கூடாது என மனு தாக்கல் செய்தார்.

சோமன் தரப்பில், “அமைச்சர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர். கும்பாபிஷேக விழா அரசு விழாவாக நடைபெறும் போது வழக்கமான சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படாமல் கோயிலில் புனிதம் கெடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் கோயில் வளாகத்தில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, "இந்து கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என அறிவிப்பு பலகைகள் கோயில்களின் முன்பு வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை விதிகளில் சொல்லப்படவில்லை. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், மக்கள் இறை நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, அவர்களின் மதத்தை உறுதி செய்வது பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பிரபல பாடகர் யேசுதாஸ் வேறு மதத்தைச் சேர்ந்தவர் தான். இருப்பினும் அவர் ஏராளமான இந்து கடவுள் பாடல்களைப் பாடியுள்ளார். அவரது பாடல்கள் கோயில்களில் ஒலிக்கின்றன. இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை. பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும்” என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

அமைச்சர் குஷி!

ஏற்கெனவே கடந்த சிலதினங்களுக்கு முன்பு வேளிமலை குமாரசுவாமி கோயில் தேரோட்டத்தின் போது அமைச்சர் மனோ தங்கராஜை வடம் பிடிக்கக் கூடாது என பாஜகவினரும், இந்து அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தனர். அமைச்சர் மனோதங்கராஜ் மத நம்பிக்கை இல்லாதவர் என அவரைக் குறிவைத்தே போராடின. அந்த வரிசையில், இப்போது திருவட்டாறு கோயில் கும்பாபிஷேகத்திலும் அமைச்சர் மனோதங்கராஜை கலந்து கொள்ளவிடாமல் இந்து இயக்கங்களின் சார்பிலேயே சோமன் வழக்குத் தொடர்ந்தார். அதற்கு நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இதனால் அமைச்சர் மனோதங்கராஜூம், அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்த மதத்தினரும் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி! பாஜகவின் மத வெறி அரசியல் தமிழகத்தில் என்றும் எடுபடாது" என்று சாடியுள்ளார்.

திரு அல்லா மண்டபம்
திரு அல்லா மண்டபம்

வரலாறு முக்கியம்!

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் திரு அல்லா மண்டபம் என ஒன்று உள்ளது. கோயில் விக்கிரகங்களை திருடிச்சென்ற ஆற்காடு நவாப் தன் தவறை உணர்ந்து கட்டிக்கொடுத்த மண்டபம் இது. பார்ப்பதற்கு அதனாலேயே பள்ளிவாசல் முகப்பு போன்றே உள்ளது இந்தக் கட்டிடம். இங்கு நடக்கும் பூஜைகளுக்கும் திரு அல்லா பூஜை என்றே பெயர்! இந்த அளவுக்கு சமூகநல்லிணக்கத்தின் தொட்டிலாக இருக்கும் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தை மதத்தை முன்னிறுத்தி குறுக்கும் செயல் குமரி திமுகவினரை உஷ்ணப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in