
தென்காசி வார்டு பகுதியில் சாக்கடைகளைச் சுத்தம் செய்யாமல் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவுவதைச் சுட்டிகாட்டும் வகையில் நகர்மன்ற கூட்டத்தில் கொசுவத்தி ஏற்றி வைத்த பெண் கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி நகராட்சி கூட்டரங்கில் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ்,அதிமுக, பாஜக உட்பட அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். நகராட்சி பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து 7 மன்ற பொருட்கள் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையே 23-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் சுனிதா, தனது வார்டு பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யவில்லை எனவும், இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி பெண்கள், குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது என்றும் கூறினார். மேலும், இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டும்வகையில் கொசுபரவலைத் தடுக்கும் விதமாக நகர்மன்ற கூட்டத்தில் கொசுவர்த்தி ஏற்றி வைத்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.