எந்த தைரியத்தில் பிடிஆர் இப்படியெல்லாம் பேசுகிறார்?

இன்னமும் கொதிப்பு அடங்காத அமைச்சர் ஐ.பெரியசாமி!
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் இடையே நடந்த கருத்து மோதல் திமுக தலைமையின் தலையீட்டால் இரவோடு இரவாக சமாதானம் பேசப்பட்டு தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

மதுரையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவுத் துறையின் அண்மைக்கால செயல்பாடுகள் சரியில்லை என்றும், திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்றும் பொதுவெளியில் விமர்சனம் செய்தார்.

இந்த விமர்சனத்தால் வெகுண்டெழுத்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தனது மாவட்டத்தைச் சேர்ந்தவரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணியையும் உடன் வைத்துக்கொண்டு, சுடச்சுட பதிலளித்தார்

மதுரை கூட்டுறவு வார விழா...
மதுரை கூட்டுறவு வார விழா...

முதல்வரையும் மக்களையும் திருப்திப்படுத்துவதே தங்கள் கடமை என்றும், அவர்கள் திருப்தியாக இருப்பதால் ரேஷன் கடைக்குச் செல்லாதவர்கள் ரேஷன் கடையைப் பற்றி தெரியாதவர்களை  திருப்தி செய்யவேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை” என்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிடிஆருக்கு மிகக் கடுமையாக பதிலடி கொடுத்தார் ஐபி. அத்துடன், தான் 50 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பதையும் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பதையும் ஜூனியரான பிடிஆருக்கு சுறுக்கெனச் சுட்டிக்காட்டினார்.

 ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

ஐபியின் இந்தப் பேட்டியை பிடிஆருக்கு வேண்டாதவர்கள் மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். இதனால், திமுக அமைச்சர்களிடையே கருத்து மோதல் என  சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவியது. கடுமையான  விமர்சனத்திற்கும் உள்ளானது.

இதனையடுத்து, இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொண்ட திமுக தலைமை, இருவரையும் அழைத்து விளக்கம் கேட்டதாகச் சொல்கிறார்கள். கூட்டுறவுத் துறை ஊழியர்கள் குறித்த விமர்சனமாகத்தான் அதை, தான்  முன்வைத்ததாகவும், துறையின் அமைச்சர் குறித்து தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்லவில்லை என்றும் பழனிவேல் தியாகராஜன் தரப்பில் சொல்லப்பட்டதாம்.

எனினும் இதுகுறித்து ஐபியிடம் பேசி  முடிவுக்கு வருமாறு பிடிஆருக்கு தலைமை அறிவுத்தியதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து, நேற்று முன் தினம் இரவோடு இரவாக இரண்டு அமைச்சர்களும் இதுகுறித்து பேசி சமாதானம் செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள். இருவரும் இனிமேல் இதுபற்றி மீடியாக்களிடம் எந்தக் கருத்தும் தெரிவிப்பதில்லை என்ற முடிவுக்கும் வந்திருப்பதாக ஐபிக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். இருந்தாலும், கட்சியில் சீனியரான தன்னை சிறுமைப்படுத்தும் விதமாக நேற்றைக்கு வந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசி இருப்பதை ஜீரணிக்க முடியாமல் இருக்கிறாராம் ஐபி. ‘எந்த தைரியத்தில் அவர் இப்படியெல்லாம் பேசுகிறார்’ என்று அவர் இன்னமும் கொதிப்பு அடங்காமல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் செயல்பாடுகள் மற்றும் அவர் தெரிவிக்கும் கருத்துகளால்  திமுகவின் மூத்த அமைச்சர்கள் பலரும் ஏற்கெனவே அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில், கூட்டுறவுத் துறையின் விழாவிலேயே, அந்தத்துறைக்கு அமைச்சரான ஐபி குறித்து பிடிஆர் விமர்சனம் செய்திருப்பது மூத்த அமைச்சர்களை மேலும் சங்கடப்படுத்தி இருப்பதாக திமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in