
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூவம் ஓரமாக உள்ள சாலைகளில் குவிந்துள்ள குப்பைகளை சேற்றில் இறங்கி அள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை மடக்கி பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தார். அப்போது மாட்டின் உரிமையாளர்கள் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள கூவத்தை ஒட்டிய சாலைகளில் குவிந்து கிடந்த குப்பைகளை ஆணையர் ராதாகிருஷ்ணன் அள்ளிய வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
அதிகாரிகள் வேலை செய்பவர்களுக்கு உத்தரவிட்டு அந்த வேலையைத் திறம்பட முடிக்க வேண்டுமே தவிர இப்படியான வீண் விளம்பரத்திற்காக தாங்களே குப்பைகளை அள்ளி அதனை புகைப்படமாக வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்ளக் கூடாது என நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில், சென்னையில் மாஸ் கிளீனிங் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் என அவருக்கு ஆதரவான குரல்களும் எழுந்துள்ளன.