
``உங்களுடைய நண்பர் உள்துறை அமைச்சர், அவரோட பையன் நடத்துகிற ஐபிஎல் போட்டிக்கு நீங்கள் டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் கிண்டலாகப் பேசுகிறார். இதனைக் கண்டிக்க வேண்டிய முதலமைச்சர் நியாயப்படுத்திப் பேசுகிறார்'' எனப் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சினீவாசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கோவை மக்களின் குடிநீர் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கத் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமெனப் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சினீவாசன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர முயன்றார்.
அதற்குச் சபாநாயகர் வாய்ப்பு வழங்காததைக் கண்டித்து அவர் வெளிநடப்புச் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கடந்த வாரம் முதல் கோவை மாநகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. 20 நாட்களுக்கு ஒரு முறை, 15 நாட்களுக்கு ஒரு முறை என்றுதான் குடிநீர் வருகிறது. இதனால் மக்களுக்குக் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிப்பதற்காக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் பிரச்சினைகளை எடுத்துப் பேசுவதற்குக் கூடப் பேரவை தலைவர் அனுமதி அளிக்காதது எங்களுக்கு வருத்தத்தைத் தருகிறது. அதன் காரணமாக இன்று வெளிநடப்புச் செய்கிறோம்.
மேலும் உங்களுடைய நண்பர் உள்துறை அமைச்சர், அவரோட பையன் நடத்துகிற ஐபிஎல் போட்டிக்கு நீங்கள் டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் கிண்டலாகப் பேசுகிறார். அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இன்னொரு அமைச்சரின் பையன்தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குத் தலைவர் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்.
இதெல்லாம் மக்களுக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சபையில் உள்துறை அமைச்சரின் பையனைப் பற்றியெல்லாம் தேவை இல்லாமல் பேசுகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். இதையெல்லாம் அவர்கள் கேட்டால் முதல்வர் இதனை நியாயப்படுத்துகிறார். மகன் என்பதால் அவர் செய்கின்ற தவறெல்லாம் அவர் கண்ணில் தெரியவில்லை போலிருக்கிறது. தவறு செய்தால் முதல்வர் கண்டிக்க வேண்டுமே தவிரத் தவறை நியாயப்படுத்தக் கூடாது'' என்றார்.