கோதுமை ஒதுக்கீட்டை 8 ஆயிரம் டன்னாக குறைத்து விட்டது: மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு

அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணிகோதுமை ஒதுக்கீட்டை 8 ஆயிரம் டன்னாக குறைத்து விட்டது: மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு

கோதுமை ஒதுக்கீட்டை 23 ஆயிரம் டன்னில் இருந்து 8 ஆயிரம் டன்னாக மத்திய அரசு குறைத்துவிட்டது. இது குறித்து மத்திய அரசுடன் பேச உள்ளோம் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் சக்கரபாணி, செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில், " ஆட்சிக்கு வந்து 3 வது ஆண்டை நோக்கி செல்கிறோம். மக்களுக்கு தரமான பொருட்களைக் கொடுக்க முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். கடந்த ஆட்சியில் 18 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை அரைக்காமல் வைத்து சென்றனர். மேலும் 10 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கடந்த 2 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை தொலைந்து விட்டால் ரூ.45 செலுத்தி அதன் நகலை பெறலாம். க்யூ ஆர் கோடு முறையில் நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கோதுமை ஒதுக்கீட்டை 23 ஆயிரம் டன்னில் இருந்து 8 ஆயிரம் டன்னாக மத்திய அரசு குறைத்துவிட்டது. இது குறித்து மத்திய அரசுடன் பேச உள்ளோம். மேலும் 15 ஆயிரம் டன் கோதுமை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மண்ணெண்ணெய் விவகாரத்தில் மத்திய அரசின் ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளோம்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தமிழக அரசை வஞ்சிக்கிறது. எதிர்கட்சி அரசு என்பதால் கோதுமை, மண்ணெண்ணெய் விவகாரத்தில் வஞ்சிக்கும் மத்திய அரசு குறித்து வரும் மக்களவை தேர்தலின் போது மக்களிடம் எடுத்துச் சொல்வோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in