
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே உச்சகட்ட பரபரப்பு நிலவிவரும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் தமிழக அரசின் சார்பில் காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கு கடந்த செப்டம்பர் 21ம் தேதி நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகஸ்ட் மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடகா பிரச்சனை செய்து வருவதாகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் செயல்படுத்துவதில்லை எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் மறு ஆய்வு மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அதில் 3000 கன அடி நீரை தினந்தோறும் தமிழ்நாட்டிற்கு வரும் 15ம் தேதி வரை கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், கூடுதலாக காவிரி நீரை கேட்டுப் பெற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தங்களால் தர முடியாது என கர்நாடகம் மறுப்பு தெரிவிக்கவே கூட்டத்திற்கு வருவதால் என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையே உள்ளது.