இரட்டை இலை தோற்றாலும் ஈபிஎஸ்ஸுக்கு வெற்றி தான்!

விடாமல் துரத்திய பாஜகவுக்கு விடை சொன்ன பழனிசாமி
ஈபிஎஸ்
ஈபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை வைத்து ஈபிஎஸ்ஸை ஓடஓட துரத்தியது பாஜக. அதையெல்லாம் சமாளித்து, நாங்கள் ஜெயலலிதாவின் பாசறையில் படித்து வளர்ந்தவர்கள் என்று பட்டவர்த்தனமாக நிரூபித்திருக்கிறார் ஈபிஎஸ்.

ஓபிஎஸ் அணியும் போட்டிக்கு வருவதால் இரட்டைஇலை சின்னம் முடக்கப்படும், அமமுக போட்டியால் வாக்குகள் சிதறும், நீதிமன்றத்தில் வழக்கு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவு, பாஜக ஆதரவு தெரிவிக்காதது, சிறிய கட்சிகளும் புறக்கணிப்பு என ஏகப்பட்ட அழுத்தங்களுடன் தான் இடைத் தேர்தல் களத்துக்கு வந்தார் ஈபிஎஸ். அவை அத்தனைக்கும் ஈடுகொடுத்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று தாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ஈபிஎஸ். 

இடைத் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி தாங்கள் நினைத்ததைச் சாதிக்க, ஓபிஎஸ், சசிகலா, பாஜக என மூன்று தரப்பும் முஸ்தீபு காட்டின. இன்னும் சொல்லப் போனால், இந்த விவகாரத்தில் ஓபிஎஸ்ஸை கைக்குள் வைத்துக்கொண்டு ஒரு ரம்மி விளையாட்டே விளையாடியது பாஜக. அந்த தைரியத்தில் தான் ஓபிஎஸ் தனக்கு என்ன பலம் என்பதே தெரியாமல் தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்தார். ‘எல்லாத்தையும் மேல இருக்கவங்க பாத்துப்பாங்க’ என்பது தான் அவருக்குள் இருந்த ஒரே தைரியம்.

அதற்கேற்ப உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த தேர்தல் ஆணையமும், ‘இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வானதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை’ என்று பகிரங்கமாகச் சொன்னது. ஓபிஎஸ் உள்ளிட்ட பழைய பொதுக்குழு உறுப்பினர்கள் இணைந்து வேட்பாளரை அறிவித்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்ற பாஜகவின் நோக்கம் அங்கே வேறு வார்த்தைகளாக எதிரொலித்தது.  

இதனால், பொதுக்குழு  உறுப்பினர்கள் ஒப்புதல் என்ற புதிய வழிகாட்டலை நீதிமன்றமும் முன்னிறுத்தியது. இதற்குள் இருக்கும் சூட்சுமத்தையும் சூழ்ச்சிகளையும் உள்வாங்கிக் கொண்ட ஈபிஎஸ், மறுப்பேதும் பேசாமல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவங்களை அனுப்பி இரண்டே நாட்களில் கையெழுத்துப் பெற்று அதன் மூலமாக தனக்குச் சாதகமான தீர்ப்பையும் பெற்றார்.

ஒருவழியாக சின்னத்தை தங்கள் தரப்புக்கு பெற்றுவிட்டாலும், நீதிமன்றம் இடைக்காலப் பொதுச்செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளாததும், சின்னம் வழங்கும் படிவத்தில் தன்னால் கையெழுத்திட முடியாமல் போனதும் ஈபிஎஸ்ஸுக்கு தடைக்கல் தான். இந்த விவகாரங்களை சூழலுக்கு ஏற்ப பயன்டுத்தலாம் என விட்டுவைத்திருக்கிறது பாஜக என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.   

முன்னதாக, பாஜக யாருக்கு ஆதரவு என்று சொல்லாமல் ஆட்டம் காட்டிய நிலையில், அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்காமல் வேட்பாளரையும் அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியையும் தன்னிச்சையாக அறிவித்தார் ஈபிஎஸ். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாஜக முகாம், சட்டென சரண்டர் ஆனது.

டெல்லியில் இருந்து திரும்பியதுமே நேராக ஈபிஎஸ்ஸின் வீட்டுக்கே ஓடிப்போய் சமாதானப்படுத்தினார் அண்ணாமலை. அவரோடு தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவியும் உடன் சென்றார். அப்படியே ஓபிஎஸ்ஸையும் சந்தித்து, ”நீங்கள் போட்டியிலிருந்து விலகிக்கொள்ளலாமே” என்றும் பஞ்சாயத்துப் பேசினார்கள். 

இதையெல்லாம் பார்த்துவிட்டு, “பாஜகவை பற்றி மக்களுக்கும் தெரியும்... எங்களுக்கும் தெரியும். நாங்கள் பாஜகவிடம் எச்சரிக்கையாக இருக்கிறோம்” என்று பொன்னையன் போன்றவர்கள் போட்டுத்தாக்கினார்கள். அதேசமயம், ஆதரவு யாருக்கு என்று சொல்லாமல் இருந்த சமயத்தில் பாஜக தலைவர்களின் படங்கள் இல்லாமலேயே ஈரோட்டில்  தேர்தல் காரியாலயத்தைத் திறந்தது ஈபிஎஸ் அதிமுக.

தற்போதைய நிலையில் இடைத்தேர்தலில் ஈபிஎஸ்ஸால் அறிவிக்கப்பட்ட கே.எஸ்.தென்னரசு தான் அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. பாஜகவும் அவருக்கே தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. “ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிக்கனியைப் பறிப்போம்” என்று  அண்ணாமலை ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார். ஆனால், ’உங்கள் ஆதரவு யாருக்கு வேண்டும்’ என்ற தொனியில், பாஜகவினரை அழைக்காமலேயே போய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் வேட்பாளர் தென்னரசு. அவர்களின் தயவில்லாமலேயே இப்போது பிரச்சாரத்தையும் தொடர்கிறார்.

தனக்கு எதிராக பாஜக தரப்பிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனையோ அழுத்தங்கள் வந்த போதும் அதையெல்லாம் சமாளித்து, தன் கையில் தான் உண்மையான அதிமுக இருக்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார் ஈபிஎஸ்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

ஈபிஎஸ் நிமிர்ந்துவிட்டார். இனி அவரை  வளைக்க முடியாது. அரசு எந்திரங்களை வைத்து மிரட்டினாலும் அவரை வழிக்குக் கொண்டுவர முடியாது என்பதை பாஜகவும் உணர்ந்து கொண்டுவிட்டது. இதற்கு மேலும் ஈபிஎஸ்ஸை மிரட்டினால் அடுத்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டு என்பது எட்டாக்கனி ஆகிவிடும் என்பதால் ஈபிஎஸ் இழுத்த இழுவைக்கு இறங்கி வந்திருக்கிறது பாஜக. அதேசமயம், எதற்கும் பயன்படுவார் என்ற தந்திர புத்தியுடன் ஓபிஎஸ்ஸையும் முதுகில் தட்டிக்கொடுத்து வைத்திருக்கிறது.  

பாஜகவின் இத்தகைய நிலைப்பாடு குறித்து பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம் ‘’அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபடவில்லை. அவர்கள் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் திமுக கூட்டணிக்குத்தான் சாதகமாக அமையும். அதனால் அதிமுக சார்பில் பொதுவான ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே பாஜக முயற்சிகளை மேற்கொண்டது. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது” என்றார்.

ஓபிஎஸ் தரப்பை அதிமுகவில் இணைக்க ஈபிஎஸ் தரப்புக்கு பாஜக அதிக அழுத்தம் கொடுத்ததாகச் சொல்கிறார்களே என்று அவரைக் கேட்டதற்கு, ”அழுத்தமெல்லாம் எதுவும் கொடுக்கவில்லை. திமுகவுக்கு எதிராக பலமான  ஒரேவேட்பாளர் என்ற நோக்கில் மட்டும்தான் பாஜக செயல்பட்டதே தவிர வேறு எந்த நோக்கமுமில்லை. இப்போதைய நிலையில் எங்கள் கூட்டணியின் வேட்பாளர் வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்றார். 

பாஜகவின் பகடைகளை எல்லாம் சாதுர்யமாக உருட்டித் தள்ளி கட்சியும், சின்னமும் தன்னிடம் இருப்பதை உறுதி செய்திருக்கிறார் ஈபிஎஸ். ஓபிஎஸ்ஸையும் தினகரனையும் ஈரோடு கிழக்கு தேர்தல் களத்திலிருந்தே அப்புறப்படுத்தி யிருக்கிறார். அத்துடன், தங்களை அழுத்திக் கொண்டிருந்த பாஜகவையும் அதற்கு ஆதரவாக நின்ற சிறு கட்சிகளின் ஆதரவையும் தங்கள் பக்கம் திருப்பி இருக்கிறார்.

ஆக, இடைத் தேர்தலில் இரட்டை இலை தோற்றாலும் அது ஈபிஎஸ்ஸுக்கு வெற்றிதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in