முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக் கடிதம்!

நூதன போராட்டம் தொடங்கிய பாஜகவினர்
மீனாதேவி தலைமையில் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்வில்...
மீனாதேவி தலைமையில் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்வில்...

கரோனா கட்டுப்பாடுகளால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் ஊர்வலங்களை நடத்தவும் தமிழக அரசு தடைவிதித்திருக்கும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜகவினர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்திகளை அனுப்வி வருகின்றனர்.

வழக்கமாகவே கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் திமுக இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதில்லை என்னும் விமர்சனத்தை பாஜக தொடர்ந்து எழுப்பிவருகிறது. அதேபோல் இந்துமதம் சார்ந்த விஷயங்களை மட்டுமே கையில் எடுத்து பாஜக அரசியல் செய்து வருகிறது. அதேநேரத்தில் திமுகவின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் திட்டம் சமூக ஆர்வலர்களிடமும் பெரும் பாராட்டைக் குவித்தது. இதேபோல் அறநிலையத் துறையின்கீழ் இயங்கும் கோயில்களில் முடி காணிக்கை இலவசம் உள்ளிட்டத் திட்டங்களும் வரவேற்பைப் பெற்றன. அதேநேரம் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்து வழிபாடு நடத்த தடுப்பதாக திமுகவை எதிர்த்து பாஜகவும், இந்து அமைப்புகளும் ஆங்காங்கே போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் இப்போது குமரிமாவட்ட பாஜகவினர், முதல்வர் மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லவில்லை என குற்றம் சாட்டுவதோடு, முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் என அவரது இல்லம், தலைமைச் செயலகத்தின் முகவரிக்கு தபால் அனுப்பத் தொடங்கியுள்ளனர். நாகர்கோவிலில் இன்று முன்னாள் நகர்மன்றத் தலைவி மீனாதேவி தலைமையில் திரளானோர் முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுகவினர், “திமுக இந்துவிரோதக் கட்சி என்பதைப்போல் கட்டமைக்க பாஜக பலவந்தமாக முயற்சிக்கிறது. அது ஒருநாளும் நடக்காது. திமுக மதங்களுக்கு அப்பாற்பட்ட மகத்தான இயக்கம். வெள்ளிக்கிழமைதான் விநாயகர் சதுர்த்தி வருகிறது. முதல்வரோ, கட்சித் தலைவரோ விசேஷங்களுக்கு அன்றைய நாளில்தான் வாழ்த்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். ஆனால், 3 நாள்களுக்கு முன்பே முதல்வர் வாழ்த்தவில்லை எனச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பாஜக செய்வது அப்பட்டமான மத அரசியல்” என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in