நாட்டிலேயே மிகமோசமான ஊழல் கட்சி பாஜகதான்!

இடியெனத் தாக்கும் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்

தமிழக பொதுவுடமைக் கட்சிகளில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வைச் சரியாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுகிற, கருத்தை வெளிப்படுத்துகிற கட்சி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சொல்வார்கள். மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் மாநாட்டு பொதுக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனின் பேச்சுக்கு கிடைத்த வரவேற்பு அதை மெய்ப்பித்தது. பரபரப்பான அரசியல் சூழலில் 'காமதேனு' இணைய இதழுக்காக அவருடன் பேசினோம்.

மார்க்சிஸ்ட் மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் ஹிட்லரின் முடிவுதான் மோடிக்கும் ஏற்படும் என்ற பொருள்படப் பேசினீர்களே... எந்த அடிப்படையில் அவ்வளவு பெரிய வார்த்தையைப் பயன்படுத்தினீர்கள்?

இலங்கையில் என்ன நடந்ததோ அதுதான் கிட்டத்தட்ட இந்தியாவிலும் நடக்கிறது. 100 ஆண்டு காலமாக தொழிலாளர்கள் போராடிப் போராடிப் படிப்படியாக பெற்ற சட்டங்கள், சலுகைகள், உரிமைகளை எல்லாம் ஒரே உத்தரவில் பறிக்கிறார் மோடி. விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல், எதிர்கட்சிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்ததுடன் நில்லாமல், 5 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அதைக்கொண்டுவர முயற்சிக்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தின்படி சுதந்திரமாகச் செயல்படக்கூடிய அமைப்புகளான தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போன்றவற்றையும் தன்னுடைய கைப்பாவையாக்கி ஆட்டுவிக்கிறார். ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சொல்லவைக்கப்படுகிறார். சாதாரண குடிமகன்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றங்களின் நம்பகத்தன்மையும்கூட கேள்விக்குறி ஆக்கப்பட்டிருக்கிறது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ராணுவத் தளபதிகளை உடனடியாக ஆளுநர்களாக, ராஜ்யசபா எம்பி-க்களாக, அமைச்சர்களாக நியமிப்பது என்ற மோடியின் செயல்பாடுகள் எல்லாமே பாசிஸ்ட்தனமாக இருக்கிறது. எனவேதான் சொன்னேன், சர்வாதிகாரியாக செயல்பட்ட ஹிட்லர் கடைசியில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரைப்போல் செயல்படும் பிரதமர் மோடிக்கு அவரது நிலை ஏற்பட்டால் நம் நாட்டிற்குத்தான் தலைகுனிவு ஏற்படும் என்று. அதன் பொருள் அப்படி நடந்துவிடக்கூடாது என்று எச்சரிப்பதுதானே ஒழிய, அப்படித்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.

பாஜக தங்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆர்எஸ்எஸின் அஜண்டாவை நிறைவேற்றுகிறது என்கிறீர்கள். திமுக மட்டும் திகவின் கொள்கைகளை, லட்சியங்களை சட்டங்களாகவும், திட்டங்களாகவும் கொண்டுவரவில்லையா?

(குறுக்கிடுகிறார்) இந்த ஒப்பீடே தவறு. மனுதர்மத்தையும், பெரியாரின் கொள்கைகளையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும்? மூடப்பழக்க வழக்கங்களும், சாதிய ஏற்றத் தாழ்வுகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது பெரியாரின் கொள்கை. சாதிக்கொரு நீதியும், ஏற்றத்தாழ்வுகளும் அப்படியே தொடர வேண்டும் என்பது மனுதர்மக் கொள்கை. கம்யூனிஸ்ட்களும் சரி, திமுகவும் சரி, எங்களுடைய கொள்கை இதுதான் என்று பகிரங்கமாகப் பேசி, மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்த கட்சிகள்.

உலகத்திலேயே சொந்தக் கொள்கையை வெளியே சொல்லவே அசிங்கப்படும் ஒரு கட்சி இருக்கிறதென்றால் அது பாஜகதான். பிரச்சாரத்தின்போது வேறொன்றைச் சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ஆர்எஸ்எஸ்-சின் மறைமுக அஜண்டாவை நிறைவேற்றுவதால்தான் அதை விமர்சிக்கிறோம்.

பெரியாரின் கொள்கையை 21 மொழிகளில் கொண்டுசெல்வதா என்று கேட்கிற பாஜகவினர், தாராளமாக மனுதர்ம சாஸ்திரத்தை உலக மொழிகளில் எல்லாம் வெளியிடட்டும். அதையும் மத்திய அரசின் நிதியிலேயேகூட செய்யட்டும். ஒரே ஒரு நிபந்தனை, அதில் உள்ளபடி மொழிபெயர்க்க வேண்டும். அதை வெளியிட்டுவிட்டு இதுதான் எங்கள் கொள்கை, இப்படித்தான் எங்கள் ஆட்சி இருக்கும் என்று வெளிப்படையாக அவர்கள் சொல்லட்டும் பார்க்கலாம். அடுத்த நாளே அந்த ஆட்சியும் இருக்காது; கட்சியும் இருக்காது.

பாஜகவை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட்களும் இனி கோயில் விழாவில் பங்கேற்பது குறித்து முடிவெடுப்போம் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியிருக்கிறாரே... உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

தோழர் கே.பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு முதலில் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். நான் பங்கேற்ற அந்த பொதுக்கூட்டத்திலேயே இந்தச் சர்ச்சைக்கு அவர் விளக்கமளித்துவிட்டார் அவர். "கோயில் விழாவில் பங்கேற்பது என்றால், நாங்களும் போய் பூஜை செய்வதல்ல, மக்கள் நடத்துகிற விழாக்களை ஆர்எஸ்எஸ்- பாஜகவினர் தாங்களே நடத்துவதாக காட்டிக்கொண்டு மக்களை தவறாக வழிநடத்தப் பார்க்கிறார்கள். இதை முறியடிக்க வேண்டும்" என்றுதான் அவர் சொன்னார்.

எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் பெரும்பாலானவர்கள் நாத்திகர்கள். அவர்கள் காவிக்கொடியைக் கட்டுகிறார்கள் என்பதற்காக நாங்களும் போய் கோயில்களில் செங்கொடியை கட்ட முடியாது. கோயில் விழாக்களில் நேரடியாக கட்சி சார்பில் நாங்கள் பங்கேற்க முடியாது.

சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் போராட்டம் நடத்தியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தடுக்க முடியவில்லையே?

இரக்கமற்ற அரசு இது. ஏற்கெனவே கரோனாவால் கொடும் துன்பத்துக்கு ஆளான மக்கள் அதிலிருந்து மீளவில்லை. சிறுகுறு தொழிற்சாலைகள் எல்லாம் மூடிக்கிடக்கின்றன. இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையைத் தொடர்ந்து உயர்த்துவதையும், கூடவே டோல்கேட் கட்டணங்களையும், 800 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலையையும் உயர்த்துவதையும் மனிதாபிமானமுள்ள யாரும் செய்ய மாட்டார்கள்.

டோல் கட்டண உயர்வு என்பதை யாரோ லாரிக்காரர்களுக்கான வரி உயர்வாகக் கடந்து சென்றுவிட முடியாது. ஒவ்வொரு லாரியும் குறைந்தது 10 டோல்கேட்டைக் கடந்து வருகின்றன. அவர்கள் கொடுக்கிற சுங்கக் கட்டணம் எல்லாம், உணவு தானியங்கள், காய்கறிகள், சிமென்ட், கம்பி, உரம் போன்றவற்றின் விலை உயர்வு வாயிலாக மக்களின் தலையில்தான் விழும். ஒரு பக்கம், வரி மேல் வரி போட்டு மக்களைக் கசக்கிப் பிழிகிற மோடி அரசாங்கம், இன்னொரு பக்கம் கார்ப்பரேட்களுக்கு மட்டும் கேட்காமலேயே வரிச் சலுகைகளை வாரி வழங்குகிறது. அதனால்தான் சொல்கிறேன் இது இரக்கமற்ற அரசு என்று.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை பாஜக கடுமையாக விமர்சித்திருக்கிறதே?

5 ஆயிரம் கோடி ரூபாயைக் கொண்டுபோய் பதுக்குவதற்காகவே முதல்வர் துபாய் போனார் என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறார். "ஒரே ஒரு நாட்டிற்குச் சென்ற ஒரு மாநில முதலமைச்சரே 5 ஆயிரம் கோடி ரூபாயைப் பதுக்க முடியும் என்றால், இவ்வளவு பெரிய நாட்டின் பிரதமர், அதுவும் இனிமேல் அவர் போக வேண்டும் என்றால் புதிதாக ஒரு நாடு உருவானால்தான் உண்டு என்கிற அளவுக்கு உலக வரைபடத்தில் உள்ள அத்தனை நாடுகளுக்குப் போன பிரதமர் எத்தனை லட்சம் கோடி பணத்தைப் பதுக்கியிருப்பார்?" என்று மக்கள் கேட்பார்களே? அதற்கு அண்ணாமலை என்ன பதில் வைத்திருக்கிறார்?

"தொடர் புகார்களில் இருந்து தன்னையும், தன் குடும்பத்தினரையும் காப்பாற்றிக்கொள்ளவே முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்திருக்கிறார்" என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே?

தமிழ்நாட்டின் முதல்வராக ஏற்கெனவே இருந்தவர் என்ற முறையில் அவர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? “முதல்வர் ஸ்டாலின் 14 கோரிக்கைகளைத்தான் பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறார். இந்தந்த கோரிக்கைகள் எல்லாம் விடுபட்டுப் போய்விட்டது. அதையும் வலியுறுத்தியிருக்கலாம்” என்று சொல்லியிருக்க வேண்டும். அல்லது, “முதல்வர் கொடுத்த கோரிக்கைகளை தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி பிரதமர் நிறைவேற்றித்தர வேண்டும்” என்று ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக வலியுறுத்தியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, தான் முதல்வராக இருந்தபோது என்ன செய்தாரோ, அந்தச் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார் பழனிசாமி.

ஊழலுக்கு எதிரான கட்சி பாஜக என்கிறார் மோடி. ஆனால், கர்நாடகாவில் ஆளும் பாஜக மீதும் ஊழல் புகார்களும், 40 சதவீத கமிஷன் புகார்களும் வெளிவந்துகொண்டே இருக்கிறதே..?

இந்தியாவில் இருக்கிற அரசியல் கட்சிகளிலேயே மிகப்பெரிய, மோசமான ஊழல் கட்சி பாஜகதான். ஏற்கெனவே இருந்த, பிரதமர் நிவாரண நிதியை ஒழித்துவிட்டு, ’பிஎம் கேர்ஸ்’ என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை வசூல் பண்ணினாரே மோடி? அந்தத் தொகைக்கு ஏதாவது வரவு செலவு கணக்கு காட்டினாரா? பிஎம் கேர்ஸ் தணிக்கைக்கும் உட்பட்டதல்ல, தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலும் கேள்விகேட்க முடியாது என்று சொல்லி அந்தத் தொகையை அமுக்கிவிட்டார்களே, கரோனா பேரிடர் காலத்தில் உலகில் இதைவிட பெரிய ஊழல் எதுவும் இருக்குமா?

அடுத்து, தேர்தல் நிதி திரட்டுவதற்காக யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம், கொடுத்தவர்களின் பெயரையும் வெளியிட வேண்டியதில்லை, கொடுத்த தொகையையும் சொல்ல வேண்டியதில்லை என்று சட்டத்தைத் திருத்தி ஒரு பெருந்தொகையை வசூலித்திருக்கிறதே பாஜக இது ஊழலின் கீழ் வராதா? நாங்கள் எல்லாம் ஒரு கட்சி அலுவலகத்தைக் கட்டுவதற்கு மக்களிடம் கையேந்தி, காசு சேர்க்க வேண்டியதிருக்கிறது. டெல்லியில் இருந்து பத்து பைசா கூட வராது. டெல்லியில் இருந்து டி.ராஜாவோ, யெச்சூரியோ திறப்பு விழாவுக்குத்தான் வருவார்கள். அவர்களின் பயணச் செலவுக்குக்கூட நாங்கள்தான் காசு கொடுத்து அனுப்புவோம். நாங்கள் கட்டிய ஒவ்வொரு கட்டிடத்துக்குமான வரவு, செலவு கணக்குகளையும் திறந்த புத்தகமாக வைத்திருக்கிறோம். ஆளானப்பட்ட கலைஞரே அண்ணா அறிவாலயத்தைக் கட்டுவதற்கு 2 ஆண்டுகள் தமிழ்நாடு முழுக்கச் சுற்றியிருக்கிறார். ஆனால், பாஜகவினர் மக்களிடம் ஒரு பைசாகூட நன்கொடை வாங்காமல், தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் பிரம்மாண்டமான கட்சி அலுவலகங்களை கட்டி வருகிறார்களே, எங்கிருந்து வருகிறது நிதி? அதைப் பகிரங்கமாகச் சொல்ல முடியவில்லை என்றால் அது திருட்டுப்பணம்தானே?

வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்தாகியிருக்கிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும் இந்த அரசு?

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வன்னியர் மக்கள் கணிசமாக வாழ்கிற பகுதியும் ஒன்று. கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அம்மக்களுக்கு சமூகநீதி அடிப்படையில் தீர்வு வேண்டும் என்று வன்னியர் சங்க காலத்தில் இருந்தே போராடுகிறார் மருத்துவர் ராமதாஸ். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில்தான் அதிமுக அரசு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு கொடுத்தது. எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது என்று கேட்டு நீதிமன்றம் அதை ரத்துசெய்திருக்கிறது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள சமூகங்களுக்கு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவதே சரியாக இருக்கும். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது ஒவ்வொரு சாதிக்காரர்களையும் கூப்பிட்டு, உங்கள் சாதிக்காரர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று அவர்களிடமே கேட்டாரே, அந்த மாதிரி கேட்டு முடிவெடுப்பது பலன் தராது. சாதிவாரி கணக்கெடுப்பை இன்றைய அரசு செய்யும் என்று நம்புகிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in