திமுகவைவிட சிறுபான்மையினருக்கு பாஜக அதிக இடங்களை அளித்துள்ளது; அண்ணாமலை தகவல்

திமுகவைவிட சிறுபான்மையினருக்கு பாஜக அதிக இடங்களை அளித்துள்ளது; அண்ணாமலை தகவல்
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகிறார்

”இத்தேர்தலில் அதிகமான மாநகராட்சிகளில் திமுகவைவிட சிறுபான்மையினருக்கு பாஜக அதிக இடங்களை அளித்துள்ளது” என்று விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகளில் 102 உறுப்பினர் பதவிகளுக்கும், 7 பேரூராட்சிகளில் 108 உறுப்பினர் பதவிகள் என 210 பதவிகளுக்கு வருகின்ற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 935 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விழுப்புரத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசியபோது, “ஒவ்வொரு தேர்தலில் பெரிய கட்சி பெரிய கட்சி என வாக்களித்து வாய்ப்பளித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் ஒரு மனிதனிடம் வாழ்க்கையை மாற்றியது பாஜக.

57 லட்சம் கழிப்பறைகளை தமிழகத்தில் பாஜக அரசு இலவசமாக கட்டிக்கொடுத்துள்ளது. முத்ரா கடன் திட்டத்தின் மூலம் பலரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி கிலோ ரூ.42-க்கு வாங்கி மாநில அரசுக்கு ரூ.2-க்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், மாநில அரசு அந்த ரூ.2-ஐ வழங்கிவிட்டு தாங்களே இலவசமாக வழங்குவதாக பில்டப் செய்கிறார்கள்.

திமுக நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்துவிட்டு, தற்போது 73 சதவீத சகோதரிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படவில்லை. ஆயிரம் ரூபாயை 4 ஆண்டுகளில் தருவோம் என்கிறார்கள். 4 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பீர்களா? 8 மாத கால ஆட்சி மக்களிடம் 80 ஆண்டுகாலம் ஆண்டபோது ஏற்படும் சலிப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக அலுவலகம் மீது குண்டு வீசியவரை போலீஸார் பிடித்து விசாரித்தபோது, நீட் தேர்வை ஆதரிப்பதால் குண்டு வீசியதாக சொல்லியுள்ளார். பாஜக மட்டுமே திமுகவை விமர்சித்துப் பேசிவருகிறது. திமுக அமைச்சர் மஸ்தான், தன் மனைவியான வேட்பாளரிடம் நேர்காணல் நடத்துகிறார். கோபாலபுரம் ஸ்டைலை தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுகவினர் கொண்டுவந்துவிட்டனர். மக்களின் வலியை தெரிந்தவர்கள் பாஜக வேட்பாளர்களே.

தமிழகத்தில் உள்ள 27 மாநகராட்சிகளில் 25 கிறிஸ்தவர்கள், 8 இஸ்லாமியர்களுக்கு பாஜக இத்தேர்தலில் வாய்ப்பளித்துள்ளது. அதிகமான மாநகராட்சிகளில் திமுகவைவிட சிறுபான்மையினருக்கு இத்தேர்தலில் பாஜக அதிக இடங்களை அளித்துள்ளது.

கரோனாவால் 30 கோடி பேர் இறப்பதாக ராகுல் காந்தி கூறிவிட்டு இத்தாலி சென்றுவிட்டார். தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஹார்ட் அட்டாக் வருமென்று ஒரு தலைவர் சொன்னார். கரோனாவை வெல்ல இந்தியத் தயாரிப்பான தடுப்பூசி பூனாவிலிருந்து கொண்டுவரப்பட்டு, அனைவருக்கும் 2 தவணை செலுத்தப்பட்டுள்ளது. 170 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுள்ளது.

பொய்ப் பிரச்சாரங்களை நம்பாதீர்கள். திமுக செய்த தவறுகளை மன்னிக்காதீர்கள், பாஜக செய்த நல்லவற்றை மறக்காதீர்கள்” இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.