ஈபிஎஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு : ஓபிஎஸ் தரப்பினர் கொண்டாட்டம்

ஈபிஎஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு : ஓபிஎஸ் தரப்பினர் கொண்டாட்டம்

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லாது என்றும், அவர் நடத்திய பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்தார். ஆனால், அவரை மாற்ற கோரி ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தாமாகவே இவ்வழக்கிலிருந்து விலகினார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க தற்போது நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையின் போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் மீதான தனிப்பட்ட விமர்சனம் வேண்டாம் என்றும் இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதது சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து அதிமுக பொதுக் குழு தொடர்பான வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்ட வேண்டும். அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் முன்னதாக தீர்ப்பை எதிர்பார்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இல்லங்கள் முன்பாக அவரவர் தொண்டர்கள் கூடினர் .

தற்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in