அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி: 39 இடங்களில் அதிகாலை முதல் சோதனை

எஸ் பி வேலுமணி
எஸ் பி வேலுமணி

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், மற்றும் வேலுமணி ஆகியோர் வீடுகள் உட்பட 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் கோவையை சேர்ந்த எஸ்.பிவேலுமணி. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர். தற்போது ஈபிஎஸ் அணியில் மிக முக்கியமான நிர்வாகிகளாக இவர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது வீடுகளில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கெனவே சோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலுமணி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோது கிராமங்களில் தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் பணி ஒப்பந்தங்களின் போது மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்து நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கி அரசுக்கு 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சி விஜயபாஸ்கர்
சி விஜயபாஸ்கர்

சென்னையில் 10 இடங்கள், கோவையில் 9 இடங்கள் உட்பட வேலுமணி சம்பந்தப்பட்ட 23 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 16 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது. அவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது வேல்ஸ் மருத்துவமனைக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சோதனைகள் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆவணங்களை சேகரிப்பதற்காக சோதனைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல நமது அம்மா செய்தி நாளிதழ் வெளியீட்டாளரான வடவள்ளி சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அவர்களது ஆதரவாளர்கள் ஏராளமாக குவிந்து வருகிறார்கள். இதனால் அங்கெல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் அதிமுக வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in