ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது: எடுத்துச் சொல்கிறார் இன்பதுரை!

ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது: எடுத்துச் சொல்கிறார் இன்பதுரை!
இன்பதுரை

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23-ம் தேதியன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியைக் கொண்டுவர அவரது ஆதரவாளர்கள் முயற்சி மே்கொண்டு வருகின்றனர். அப்படி செய்தால் அது சட்டப்படி செல்லாது என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் உறுதியாக கூறி வரும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை விளக்கம் அளித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியினுடைய விதிகளை சுட்டிக்காட்டி ஒற்றைத் தலைமையை உருவாக்கும் உரிமை பொதுக்குழுவுக்கு உள்ளதாக உறுதியாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அதிமுகவில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு பொதுக் குழுதான். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றாலும் அது செல்லாது. ஒற்றைத் தலைமையை ஏற்படுத்தும் உரிமை பொதுக்குழுவுக்கு உண்டு. அதில் சட்ட ரீதியாக எந்த சிக்கலும் இல்லை. தேர்வு செய்யப்படும் நிர்வாகிகளை மாற்றும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு உண்டு. தீர்மானம் நிறைவேற்றலாம்.

அதிமுகவில் 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் எந்த நிர்வாகியும் தேர்வு செய்யப்பட்டது கிடையாது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கும்போது பொதுக்குழுதான் தீர்மானம் போட்டது. இடைக்கால ஏற்பாடாகதான் இரட்டைத் தலைமை கொண்டு வரப்பட்டது. இப்போது அந்த நிலைமை மாற வேண்டும் என்று தொண்டர்கள் சொல்லும்போது அதற்கு விதிமுறைகள் இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தில் போய் இதுகுறித்து முறையிட்டாலும், அவர்கள் இதில் நடவடிக்கை எடுக்க முடியாது. யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம், அதற்கான சட்ட விதிகளில் என்ன இருக்கிறது என்பதை காட்டச் சொல்வார்கள். அப்படி ஓற்றைத் தலைமைக்கான விதிகள் கட்சியில் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் நீதிமன்றத்திற்கு செல்வோம், பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுப்போம் என்று சொல்லலாம். அதெல்லாம் எதுவும் நடக்காது. விதிகள் தெளிவாக இருக்கிறது என்று இன்பதுரை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in