'அது ஓபிஎஸ் பிரைவேட் கம்பெனி கூட்டம்... கட்சிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை' - ஜெயக்குமார் அதிரடி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்hindu

ஓ.பி.எஸ்.பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டம்தான் நடைபெறுகிறது. அது அதிமுக கட்சி கூட்டம் கிடையாது. எனவே இந்த கூட்டத்தைக் கட்சி கூட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. கட்சிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. அந்த கூட்டத்தில் எந்த அதிமுக தொண்டரும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக அரசு பொறுப்பேற்று 18 மாதத்தில் சொத்துவரி உயர்வு,மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு,வீட்டு வரி உயர்வு, இதுபோன்று பல்வேறு வகைகளில் மக்கள் பாதிப்படைகின்றனர். அதேபோல சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக மக்கள் வாழமுடியாத நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் போட்டி கூட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : அது ஓ.பி.எஸ்.பிரைவேட் லிமிடெட் கம்பெனி. அந்த கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டம்தான் அது. அது கட்சி கூட்டம் கிடையாது. அந்த நிறுவனத்தின் சார்பில் விளம்பரம் அளித்துள்ளார்கள். ஆட்களைத் தேர்வு செய்கிறார்கள். எனவே இந்த கூட்டத்தைக் கட்சி கூட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. கட்சிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. அவரின் செயல்பாடுகள் எதுவும் தமிழகத்தில் எடுபடாது. அந்த கூட்டத்தில் எந்த அதிமுக தொண்டரும் கிடையாது. அவரின் நிறுவனத்தின் கூட்டம்தான் நடைபெற்றுவருகிறது.

கேள்வி : உதயநிதி எனக்கு வரும் விமர்சனத்தை எதிர்கொண்டு அதனைச் செயல்பாட்டில் காட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளாரே?

பதில் : ஒரு விளையாட்டுத் துறை அமைச்சர் அவர். உலகத்தில் 100 கோடி பேர் கால்பந்து போட்டியைப் பார்த்தனர். நான் அர்ஜெண்டினா வெற்றி பெறும் என்றேன்.வெற்றி பெற்றுவிட்டது. என் வாக்கு பலித்துவிட்டது. நாங்கள் ஆளும் கட்சியாக இல்லை என்றாலும் விளையாட்டில் மக்கள் எதிர்பார்க்கும் விஷயம் தொடர்பாக நாங்கள் ஆக்டிவாக உள்ளோம். போட்டி நடக்கும் இரவு எங்குச் சென்றார் உதயநிதி. ஒரு விளையாட்டுத்துறை அமைச்சர் என்ன செய்திருக்கவேண்டும் நேரு ஸ்டியத்தில் விளையாட்டு வீரர்களுடன் அமர்ந்து விளையாட்டை ஊக்கவித்திருக்கலாம். அன்று இரவு காணாமல் போய்விட்டார். இப்படிப்பட்ட ஒரு விளையாட்டுத்துறை அமைச்சர் துடி துடிப்பாகச் செயல்படுவரா?. எதில் துடி துடிப்பு காட்டுவார் என்று எனக்குத் தெரியவில்லை.

கேள்வி : உண்மையான அதிமுக நாங்கதான். ஈபிஎஸ் மன்னிப்பு கடிதம் அளித்தால் சேர்ந்து கொள்வோம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாரே?

பதில் : அவரை நான் மிகவும் மதிக்கிறேன். மூத்தவர். அவர் மீது மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன். கண்ணுக்குத் தெரிந்து கட்சி அலுவலகம், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள்,ஸஅமைப்புச் செயலாளர்கள், 1 லட்சம் கிளைக் கழகம், அனைத்தும் எங்களிடத்தில் உள்ள நிலையிலே எடப்பாடியார் தலைமையில் இன்று கட்சி செயல்பட்டுவருகிறது. ஒன்றிய அளவிலே,நகர அளிவிலே,மாநகராட்சி அளவிலே இவ்வளவு ஆர்ப்பாட்டங்களைச் செய்கிறோம். பொதுக்கூட்டங்களை நடத்துகிறோம். கட்சியின் ஆண்டுவிழாவை நடத்துகிறோம். இதில் ஏதாவது ஒன்றை அவர்கள் செய்தார்களா. அங்கு ஆள் கிடையாது. பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு நல்ல இமேஜ் உள்ளது. அதனை அவர் கெடுத்து கொள்ளக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதுபோல அந்த கூடா நட்பைத் தவிர்ப்பது நல்லது. இது என்னுடைய ஆலோசனை.

கேள்வி : பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து குறித்து?

பதில் : தோழமையுடன்,நட்போடு இருக்கும் கட்சிதான் பாஜக. இதில் மாறுப்பட்ட கருத்து இல்லை.இது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் தெரிவித்துவிட்டார். நானும் கருத்து தெரிவித்துவிட்டேன். அண்ணாமலையும் கூறிவிட்டார். இதோடு இதற்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுங்கள்.

கேள்வி : திமுக அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா?

பதில் : நான் தெளிவாகக் கூறுகிறேன்.திமுகவைப் பொறுத்தவரையில் அது சந்தர்ப்பவாத அரசியலை செய்யும் கட்சி. அவர்களுக்குப் பதவி ஒன்றுதான் முக்கியம். அதனால் அவர்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்குவார்கள். ஆனால் இதனை முடிவு செய்யவேண்டியது பாஜகதான். பாஜகவை பொறுத்தவரையில் எங்களுடன் தோழமையில் இருக்கிறார்கள். நட்புடன் இருக்கிறார்கள்.

கேள்வி: அண்ணாமலையின் கையில் இருக்கக்கூடிய வாட்ச் குறித்துப் பேசியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் சபரீசன் கையில் இருக்குகூடிய வாட்ச் ரூ. 16 கோடி,உதய நிதி கையில் இருக்கக்கூடிய வாட்ச் ரூ. 12 லட்சம் என்று கணக்கு சொல்லிவருகிறார்களே?

பதில் : இதனை அண்ணாமலை தெளிவுப்படுத்தியுள்ளார். அது ரூ. 5 லட்சம் வாட்ச் என்று ஒத்துக்கொண்டார். அதற்குரிய கணக்கை அளிக்கிறேன் என்கிறார், சொத்து கணக்கு அளிக்கிறேன் என்கிறார். இதனை மெய்ப்பிக்கும் சுமை அண்ணாமலையுடையது. அதே நேரத்தில் ஸ்டாலின்,சபரீசன்,உதயநிதி ஆகியோரை உண்மையிலே மனசாட்சி தொட்டுச் சொல்லச் சொல்லுங்கள். அவர்களுக்கு எத்தனை வாட்ச் என்று. ஸ்டாலின் கட்டும் வாட்ச் குறித்துப் பாருங்கள்.ஸஅவர் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி, ஆளும் கட்சியாக இருக்கும்போது சரி சட்டமன்ற பதிவுகளை அவர் நாட்டு மக்களுக்குப் போட்டுக் காண்பிக்கத் தயாரா. ஒவ்வொரு வாட்ச்சின் மதிப்பு 15 லட்சம், 20 லட்சம். இதுபோன்ற விலை உயர்ந்த வாட்சை ஸ்டாலினும், சபரீசனும், உதயநிதியும் கட்டியுள்ளனர். உழைத்து சம்பாதித்த பணமா அது. இப்படி தன்னுடைய முதுகில் அழுக்கை வைத்துவிட்டு,பிறர் முதுகில் அழுக்கைத் தேட வேண்டாம்.

தமிழகத்தில் உள்ள பொது பிரச்சனை குறித்து தற்போது போராடி வருகிறோம். அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கும் போராட்டம் நடத்துவோம்.

கேள்வி :அம்மா உணவகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதே

பதில்: எந்த நோக்கத்திற்காக அம்மா உணவகம் ஆரமித்தார்கள். அதில் லாப நோக்கம் கிடையாது. அது மக்களுக்கு அட்சயபாத்திரம். அதில் நஷ்டம் ஏற்படட்டும். நாங்கள் நஷ்டப்படும்போதும் உணவே அளித்தோமா இல்லையா. இப்போது ஆட்களைக் குறைப்பது. சமையல் பொருட்களை அளிக்காமல் இருப்பது. இதுபோன்று அம்மா உணவகத்தை நிர்பந்தம் செய்கிறார்கள். அங்கு பணிபுரிபவர்களுக்கு சம்பளத்தைக் குறைத்துவிட்டார்கள். 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் எப்படி அம்மா உணவகத்தில் வேலை செய்வார்கள். இதனை படிப்படியாக மூடிவிட்டு அவர் அப்பா பெயரில் கொண்டுவருதற்கு இதுபோன்று செய்கிறார்கள். இப்போது ராயபுரத்தில் அம்மா உணவகத்தின் பெயர்ப் பலகையை கிழித்து போட்டுவிட்டு, சிற்றுண்டி திட்டம் என்று சொல்கிறார்கள். இதனை வேறு இடத்தில் கொண்டுவாருங்கள். இதற்கு ஏன் அம்மா உணவகத்தை மூடவேண்டும்.

கேள்வி : அதிமுக பாஜக கூட்டணி தொடருகிறதா இல்லையா?

பதில்: என்றைக்குமே அதிமுக தலைமையிலான கூட்டணிதான். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி இருந்தது. உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் நட்பு ரீதியாகத் தனியாக நின்றார்கள். நாங்கள் தனியாக நின்றோம். எனவே எங்களைப் பொறுத்தவரையில் தோழமை, நட்பு உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகளை அனைத்து அளவிலும் தொடங்கிவிட்டோம். மக்கள் பணியைச் செய்துவருகிறோம். இந்த ஆட்சியின்

மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இந்த திமுகவின் எதிர்ப்பு அலை எங்களுக்குச் சாதகமாக இருக்கும். எங்கள் திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடைந்த நிலையில் மக்கள் அதனை தற்போது நினைத்து பார்க்கிறார்கள். அதிமுக ஆட்சியில் எவ்வளவு திட்டங்களை அனுபவித்தோம். இந்த திமுக அரசு ஏமாற்றிவிட்டது என்று மக்கள் எண்ணத் துவங்கிவிட்டார்கள். அது எங்களுக்கு வாக்குகளாக மாறும்.

கேள்வி: பரம்பூர் விமான நிலைய பணிகள் அதிமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளாரே?

பதில் : அவர்கள் வீட்டில் சமையல் ஆகவில்லை என்றாலும் எங்களைத்தான் சொல்வார்கள். சரி அவர்கள் வாதப்படி உண்மை என்றால் நாங்கள் கொண்டுவந்தோம். நீங்கள் நிறுத்திவிடுங்கள். 136 நாட்களாகப் போராடி வருகிறார்களே. எங்கள் ஆட்சியில் போராட்டம் நடத்தினார்களா. எங்கள் ஆட்சியில் நீங்கள் குறிப்பிடுவதுபோல ஒரு திட்டத்தைக் கொண்டுவந்திருந்தாலும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றால்தான் அதனை நடைமுறைப்படுத்துவோம். தற்போது 136 நாட்கள் போராடி வரும் விவசாயிகளைச் சந்தித்தீர்களா. 13 கிராமங்கள் போராடி வருகிறது. எந்த ஆர்ப்பாட்டம் வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்.ஸஎது வேண்டுமானாலும் பேசுங்கள். அதைப்பற்றியும் கவலையில்லை என்று இருக்கிறார்கள். எருமைமாடு மீது மழை பெய்தால் அதற்கு உரைக்காது.அதுபோலத்தான் இந்த அரசும் உள்ளது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in