“அது என் குரல் அல்ல” - அலறும் செல்லூர் கே.ராஜூ

சமூக வலைதளங்களில் வைரலாகும் ‘ஆடியோ’ சர்ச்சைக்கு பதில்
செல்லூர் கே.ராஜூ
செல்லூர் கே.ராஜூ

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அதிமுகவை சசிகலா கைப்பற்றுவதற்கு ஆதரவாகப் பேசுவது போன்ற ஆடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. தற்போது செல்லூர் கே.ராஜூ மறுப்பு அறிக்கை வெளியிடும் வகையில் அக்கட்சியினர் மத்தியில் இந்த ஆடியோ சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை அதிமுகவில் பலர் விமர்சித்தாலும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மட்டும் மறந்தும் கூட, அவரை விமர்சனம் செய்யமாட்டார். சசிகலா மீது, தான் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாகப் பொதுவெளியில் பகிரங்கமாகக் கூறுவார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாநகர மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் கட்சித் தலைமைக்கும், அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், அதனால் செல்லூர் கே.ராஜூ, கட்சித் தலைமை மீது வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று சசிகலாவுக்கு ஆதரவாக அவர் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியானது.

அந்த ஆடியோவில் பேசும் நபர், தான் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பதாகக் கூறி, செல்போனில் செல்லூர் ராஜூவுடன் பேசுகிறார். அதில், ‘‘மதுரையைச் சேர்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள்தான் அரசியல் வழிகாட்டி. ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலாதான் அதிமுகவுக்கு அடையாளம். உங்களைப் போன்ற சீனியர்தான் இந்த நேரத்தில் அவரை வழிமொழிய வேண்டும்’’ என்று கூறுகிறார் சக்திவேல்.

அதற்கு செல்லூர் கே.ராஜூ, ‘‘நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். அதைச் செய்வதற்கு நாம முறையாகச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் மொத்தத்தையும் இழந்துவிடுவோம். அவர்கள் கட்சியை கைப்பற்றிப் போய்விடுவார்கள். அதற்காகத்தான் அமைதியாக இருக்கிறோம். நடக்க வேண்டியதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்ய வேண்டும்’’ என்று கூறுகிறார்.

அதற்கு எதிர்முனையில் பேசிய நபர், “காலம் கைமீறிப் போய்விடக் கூடாது. அதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்.

இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிமுகவினரிடையேயும் பொதுமக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று இந்த ஆடியோவை மறுத்து, செல்லூர் ராஜூ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அதிமுகவை வலுவோடும், பொலிவோடும் நடத்தி வருகிறார்கள். அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சில விஷமிகள் சதிவேலையில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் இன்னொரு நபருடன் நான் செல்போனில் பேசுவதுபோல் ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள குரல் என்னுடையது அல்ல. யாரோ விஷமத்தனமாக மிமிக்ரி செய்துள்ளனர்.

நான் சமீப காலமாக இரவு 10 மணிக்கு மேல் செல்போன் பயன்படுத்துவது இல்லை. ஆனால், இந்த ஆடியோ நள்ளிரவு 1.30 மணிக்கு நான் பேசியது போல வெளியாகியுள்ளது. என் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் சிலரின் நயவஞ்சக முயற்சியாக இது உள்ளது. சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக போலியான லெட்டர் பேடில் தகவல் வெளியானது. அதுபோன்று தற்போது நான் பேசாத கருத்துகளை என் குரல் போன்று பேசி பதிவு செய்து பரப்பி வருகிறார்கள்.

அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்வார்கள். ஆனால், இப்போது கட்சியை ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள். எனவே, தற்போதைய நிலையில் அதிமுக தலைமைக்கு புதிதாக ஒருவரைக் கொண்டுவரத் தேவையில்லை. தற்போது அந்தச் சூழ்நிலையும் எழவில்லை என்பது எனது கருத்தாகும். எனவே, என் குரலில் மிமிக்ரி செய்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் விஷமிகள் மீது கட்சித் தலைமையிடம் உரிய அனுமதி பெற்று, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in