`விவசாயிகளின் நெஞ்சில் பாலை வார்த்து புத்தாண்டு பரிசை அறிவித்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்'

திமுக விவசாய தொழிலாளர் அணி மகிழ்ச்சி
`விவசாயிகளின் நெஞ்சில் பாலை வார்த்து புத்தாண்டு பரிசை அறிவித்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்'

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வெள்ள சேத பாதிப்புக்களுக்கான நிவாரணத்தை அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளரும்,  முன்னாள் எம்எல்ஏவுமான ஜெகவீரபாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில்  பெய்த வடகிழக்கு பருவமடையால் மயிலாடுதுறை மாவட்டம் உள்பட 27 மாவட்டங்களில் விவசாயம்  பாதிக்கப்பட்டு சேதமடைந்தன. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக கனமழை நவம்பர் 12,  13  தேதிகளில் பெய்ததால் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சுமார் 32 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் விளைவிக்கப்பட்ட பயிர்கள் முற்றிலும் அழுகி பாதிக்கப்பட்டன. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உடனடியாக  நேரடியாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நேரில் சந்தித்து நவம்பர் 14 அன்று ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தினார். 

ஜெகவீரபாண்டியன்
ஜெகவீரபாண்டியன்

அத்துடன்  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 2.16 லட்சம் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் மழை வெள்ள நிவாரணமாக வழங்கிட உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். 

அதனையடுத்து மயிலாடுதுறை மட்டுமல்லாமல் திருவாரூர், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதை கணக்கிட்டு சுமார் 48 ஆயிரத்து 593 விவசாயிகளுக்கு 50.88 கோடி ரூபாயை வடகிழக்கு பருவமழை சேத இடுபொருள் நிவாரணம் வழங்கிட  உத்தரவிட்டுள்ளார். இதற்கு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுக விவசாய அணி மாநில இணை செயலாளர் ஜெகவீரபாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ``மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள தொகையில் 90% நிவாரண தொகை அதாவது ரூபாய் 43.92 கோடியை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த 40 ஆயிரத்து 31 விவசாயிகளுக்கு  வழங்கிட உத்தரவிட்டிருப்பது  மயிலாடுதுறை விவசாயிகளின் நெஞ்சில் பாலை வார்த்தது போல உள்ளது. 

ஏற்கெனவே பல்வேறு நிலைகளில் மகிழ்ச்சியற்ற நிலையில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு புத்தாண்டு பரிசாக நிவாரணம் அறிவித்திருப்பது மிகவும் போற்றுதலுக்கு உரியதாகும். இந்த அறிவிப்பால்  மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த  விவசாயிகளின் வாழ்வில் 2023 ஆண்டு நல்ல தொடக்கமாக அமையும். தமிழ்நாட்டின்  ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் தாயுள்ளத்தோடு உதவிகளை செய்து வருகின்ற மயிலாடுதுறை மாவட்டத்தின் மருமகன், விவசாயிகள் நலன்காத்த தலைமகன், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலினுக்கு கோடானகோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in