ஓ.ராஜா நீக்கம் ஓபிஎஸ் ஆடும் நாடகத்தின் உச்சகட்டம்!

தங்கத் தமிழ்செல்வன் காட்டம்
ஓ.ராஜா நீக்கம் ஓபிஎஸ் ஆடும் நாடகத்தின் உச்சகட்டம்!

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. கடந்த 4ம் தேதி நடந்த நகராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுகவை சேர்ந்த சுமிதா சிவகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இன்று அவர் நகராட்சித் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற முதல் நாளே, ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நகராட்சித் தலைவராக இருந்தபோது கட்டிய சுவரை இடித்துத்தள்ளும் பணியை மேற்கொண்டார்.

பெரியகுளம் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள சாலையில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்துவருவதாக கடந்த அதிமுக ஆட்சியில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததால், அப்போது நகராட்சித் தலைவராக இருந்த ராஜா இந்த சுவரை கட்டினார். ஆனால், வாலு போய் கத்தி வந்த கதையாக, இந்தப் பாதை அடைபட்டதை காரணம் காட்டி அந்த இடத்தையே மல ஜலம் கழிக்கும் இடமாக மாற்றிவிட்டார்கள். எனவே, சுவரை அகற்றி மீண்டும் பாதை அமைத்துத்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாக்கு கேட்டு வந்த திமுகவினரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாகச் சொல்லி வெற்றிபெற்ற திமுக நகராட்சித் தலைவர் சுமிதா சிவக்குமார் முதல் வேலையாக இன்று அந்த சுவரை அகற்றினார். பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன், திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் அந்தச் சுவர் ஜேசிபி உதவியுடன் இடித்துத்தள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய தங்கத் தமிழ்செல்வன், "பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலேயே இந்தச் சுவர் அகற்றப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இதுவரையில் பல நாடகங்களை நடத்தியுள்ளார். அதன் உச்சம்தான் தன்னுடைய தம்பியைவிட்டு, சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று பேச வைத்தது. இன்று அவரை மட்டும் கட்சியில் இருந்து நீக்கியதுபோல நாடகமாடியிருக்கிறார்கள். தீர்மானம் போட்ட அதிமுக மாவட்ட செயலாளர் செய்யதுகானை ஏன் நீக்கவில்லை? ஓபிஎஸ்சின் நாடகத்தை இனியும் யாரும் நம்ப மாட்டார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in