
தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பொய் பரப்புரை செய்ய வேண்டாம் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, “வேதாந்தா, பாக்ஸ்கான் முதலீடுகள் மகாராஷ்டிராவுக்கு சென்றுவிட்டதாக ஈபிஎஸ் அறியாமையில் கூறுகிறார் . தமிழகத்தில் செமி கண்டக்டர் திட்டங்களை தனியாக செயல்படுத்திட பாக்ஸ்கான் பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் குறித்து பாக்ஸ்கான் நிறுவனத்துடன் தமிழக அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்றுகூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி இப்படி அறிக்கை வெளியிடுகிறார். தமிழகத்தின் முதலீடுகளை கெடுக்கும் பொய் பரப்புரை வேண்டாம். பொய் பரப்புரை மூலம் தமிழகத்திற்கு வரும் முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளை கெடுக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார்
முன்னதாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டை திமுக அரசு தனது ஆணவத்தாலும், அலட்சியத்தாலும், ``எங்கும் கமிஷன்; எதிலும் கமிஷன்'' என்ற ஆக்டோபஸ் குணத்தாலும் விரட்டி அடித்துள்ளது. வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் இரண்டும் இணைந்து, தமிழகத்தில் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருந்தது. இந்த திமுக அரசின் ஆட்சியாளர்கள் தங்களின் பேராசையால் இம்முதலீட்டை விரட்டியடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன” என தெரிவித்துள்ளார்