பாஜகவிற்கு தெம்பூட்டும் மதிமுக தீர்மானம்?

திமுகவினர் அதிர்ச்சி
பாஜகவிற்கு தெம்பூட்டும்
மதிமுக தீர்மானம்?

சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், மதுரையில் பாஜக நடத்தும் போராட்டத்திற்கு வலுசேர்த்துள்ளதாக திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில், கட்சி கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் அளிப்பது என்பது உள்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், நிறைவேற்றப்பட்ட மற்றொரு தீர்மானம் தான், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது? மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், " திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, போதுமான அளவு தார்ப்பாய்கள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுடன், நெல் ஈரப்பதத்தைக் கட்டாயப்படுத்தாமல் கொள்முதல் செய்யவும், ஒரு மூட்டைக்கு 30 முதல் 50 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதைத் தடுக்கின்ற வகையிலும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதே கருத்தை மதுரையில் மார்ச் 21-ம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜனும் கூறினார். "நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நெல் மூட்டைக்கு 40 முதல் 60 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது என்றும், தமிழக அரசைக் கண்டித்து மதுரையில் மார்ச் 29-ம் தேதி அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்றும் அவர் கூறியிருந்தார். தமிழகம் முழுவதும் நெல்கொள்முதல் நிலையங்களை திமுகவினர் நடத்தி வருவதாக பாஜக கூறி வரும் நிலையில், அதை வலுப்படுத்தும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதாக மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதைக் கண்டு திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in