கருணாநிதி நினைவிடத்தில் திடீர் கோயில் கோபுரம்!- காரணம் என்ன?

கருணாநிதி நினைவிடத்தில் திடீர் கோயில் கோபுரம்!- காரணம் என்ன?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் திடீரென இந்து கோயில் கோபுரம் வரையப்பட்டுள்ளது. இதைப் பார்த்த திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமான தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அந்த இடத்தில் 2.21 ஏக்கரில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்தார். இது ஒருபுறம் இருக்க கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது முதல் அந்த நினைவிடம் நாள்தோறும் கட்சியினர் சார்பில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2022-23-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதன் காரணமாக கருணாநிதி நினைவிடத்தில் கோயில் கோபுரம் போன்ற மாதிரியை வடிவமைத்து அலங்கரித்துள்ளனர். கடவுள் மறுப்பு கொள்கையுடன் இருந்த கருணாநிதியின் நினைவிடத்தில் கோயில் கோபுரம் போன்று வடிவமைக்கப்பட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, அமைச்சர் சேகர் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்து சமய அறநிலையத்துறையின் 2022-23-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று வணங்கி ஆசி பெற்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in