யூடியூப் சேனலில் கிடைத்த பணத்தில் யோகிக்கு கோயில்: அயோத்தியில் அசத்தும் பக்தர்

யூடியூப் சேனலில் கிடைத்த பணத்தில் யோகிக்கு கோயில்: அயோத்தியில் அசத்தும் பக்தர்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு அயோத்தியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதை அவரது தீவிர பக்தரான பிரபாகர் மவுரியா, யூடியூப் சேனலில் கிடைத்த தொகையில் கட்டியுள்ளார்.

கோயில்களும், மடங்களும் நிறைந்த நகரமான அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதனால், அன்றாடம் பல்லாயிரம் பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகியின் பெயரிலும் புதிதாக ஒருகோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலை முதல்வர் யோகியின் தீவிர பக்தரான பிரபாகர் மவுரியா கட்டியுள்ளார்.

இங்குள்ள யோகியின் சிலைக்கு அன்றாடம் மவுரியா இரண்டு முறை அர்ச்சனை செய்து வருகிறார். இக்கோயிலை கட்ட தனது சொந்த உழைப்பில் கிடைத்த தொகையில் முதல்வர் யோகிக்கான கோயிலைக் கட்டி அவர் மகிழ்ந்துள்ளார். முதல்வர் யோகியின் உயரத்திற்கு இணையாக அமைந்த சிலையின் கையில் அம்பும், தோளில் வில்லையும் ஏந்தி சிரித்த நிலையில் காட்சி தருகிறார் முதல்வர் யோகி.

தங்கள் தலைவர்களை கண்மூடித்தனமாக நேசிப்பவர்கள் பலரும் வித்தியாசமான முறைகளில் அவர்களை போற்றி வருகிறார்கள், இவர்களில் வித்தியாசமான பக்தர் இந்த பிரபாகர் மவுரியா என அவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அயோத்திவாசியான பிரபாகர் மவுரியா அங்குள்ள கோயிலில் பஜனை பாடல்களைப் பாடி வருபவர். இவர் உ.பி முதல்வராக யோகி அமர்ந்தது முதல் அவரது தீவிர பக்தராகி விட்டார்.

இதனால், யோகியை போற்றும் பல பாடல்களை எழுதி அவற்றை தானே நடத்தும் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார். இதைக் கண்டு களித்து பின்பற்றி வருபவர்கள் எண்ணிக்கை பல மில்லியன்கள் உள்ளன. இதன்மூலம் கிடைத்த சுமார் ஐந்து லட்சம் ரூபாயில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் மவுரியாகா பூர்வா கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியால் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை கடந்த ஆகஸ்ட் 2020-ல் நடத்தப்பட்டது. இதேநாளில் முதல்வர் யோகியின் கோயிலுக்கும் அவரது பக்தரான பிரபாகர், பூமி பூஜை செய்திருந்தார். இவரைப் பாராட்டி நெகிழ்ந்த முதல்வர் யோகி, லக்னோவிற்கு பிரபாகரை அழைத்து பலமுறை பாராட்டியுள்ளார். அயோத்தியின் கோயில்கள் பட்டியலில் முதல்வர் யோகிக்கானதும் இணைந்து முக்கியத்துவம் பெறத் தொடங்கி விட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in