
அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 65 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு வேட்பாளர்களை நிறுத்த அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து ஜனசேனா போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாண் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 65 வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணியுடன் தெலுங்கு தேசம் போட்டியிட்டது. அப்போது இரண்டு இடங்களை மட்டுமே அந்த கட்சியால் பெற முடிந்தது. அப்படி வெற்றி பெற்ற இரண்டு எம்எல்ஏக்களும் பிஆர்எஸ் கட்சிக்குத் தாவினர்.
இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறதேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை இறுதி செய்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் கசானி ஞானேஷ்வர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த தேர்தலில் தங்கள் கட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளதால், வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அத்துடன் ஹைதராபாத், ரங்கா ரெட்டி மற்றும் மேட்சல் மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான வேட்பாளர்களை தெலுங்கு தேசம் கட்சி நிறுத்த முடிவு செய்துள்ளது.