தொலைக்காட்சி விவாதங்கள்: அதிமுக, பாஜக இனியாவது பங்கேற்குமா?

தொலைக்காட்சி விவாதங்கள்: அதிமுக, பாஜக இனியாவது பங்கேற்குமா?

தமிழகத்தில் செய்திச் சேனல்கள் பெருகிய பிறகு, எந்நேரமும் பிரேக்கிங் நியூஸ் போட்டு பதறடிக்கிறார்கள் என்று ஒருபுறம் புகார்கள் இருந்தாலும், இன்னொரு புறம் ஒன்றிரண்டு விவாதங்கள் ஆக்கபூர்வமாகவும் நடைபெறுகின்றன. அன்றாட அரசியல், நிகழ்வுகள் குறித்த விவாதங்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் பத்திரிகையாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்பதால், ஒரு பிரச்சினையின் பல்வேறு கோணங்கள் குறித்த தகவல்களும், பார்வைகளும் தொலைக்காட்சி நேயர்களுக்குக் கிடைக்கின்றன.

ஆனால், அதிமுகவில் இரட்டைத் தலைமைக்குள் ஏற்பட்ட உரசல் காரணமாக இதுதொடர்பாக ஊடகங்களிடம் யாரும் பேசக்கூடாது என்று கட்சியினருக்குத் தடை போட்டது அக்கட்சி. கோடநாடு விவகாரம் பேசுபொருளானதும், ஊடக விவாதங்களில் அதிமுக பங்கேற்காது என்று அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதிமுகவுக்காவது இப்படிப் பல பிரச்சினைகள். ஆனால், பாஜகவுக்கு பெரியளவில் பிரச்சினைகள் இல்லை என்றாலும் கூட, நெறியாளர்கள் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லி ஊடக விவாதங்களில் இருந்து விலகியிருக்கிறது அக்கட்சி.

இதனால் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்களில் ஒரு தரப்பினரின் கருத்து இல்லாமல், முழுமையற்ற விவாதமாக ஒளிபரப்பாகின்றன. எனவே, மீண்டும் அதிமுகவும், பாஜகவும் ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. நியூஸ் 7 செய்திப் பிரிவு நிர்வாகிகளில் ஒருவரான எழுத்தாளர் ஆர்.முத்துகுமார், "தொலைக்காட்சி விவாதங்களில் மீண்டும் அதிமுக, பாஜக பிரதிநிதிகள் வர வேண்டும். ஆளுங்கட்சி மீதான விமர்சனங்களை அவர்கள் நேரடியாக எடுத்து வைப்பதுதான் சரியான ஜனநாயகமாக இருக்கும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இதுகுறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, "தொலைக்காட்சி விவாதங்கள் தமிழகத்தில் ஒரு தலைபட்சமாக செல்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். எங்களுக்கு உரிய நேரம் கொடுப்பதில் நிகழ்ச்சியை நடத்துபவர்கள், வெளியீட்டாளர்கள் தவறுகின்றனர் என்பதே எங்கள் குற்றச்சாட்டு.

மேலும், திமுகவுக்கு ஆதரவான பல நபர்களை மூத்த பத்திரிகையாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்ற பல்வேறு போர்வையில், பெயரில் தொடர்ந்து அவர்களை அழைத்துவந்து எங்களுக்கு எதிராகப் பேச வைப்பதுடன், எங்களது கருத்துக்களை முன்வைப்பதற்குப் போதுமான நேரத்தையும் தர மறுக்கிறார்கள். எங்களுக்கும் பேசுவதற்கு உரிய வாய்ப்பும், நேரமும் தருவதற்கு தொலைக்காட்சிகள் தயார் என்றால், பங்கேற்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை" என்றார்.

"நீங்கள் பங்கேற்காமல் விவாதங்கள் நடைபெறுகிறபோது, அது இன்னும் ஒரு தலைப்பட்சமாகிவிடுவதற்கான வாய்ப்பு இயல்பாகவே ஏற்பட்டுவிடும் என்பதை உணர்கிறீர்களா?"

"அதுகுறித்து நாம் கவலைப்படவில்லை. ஏன் என்றால், நாம் கலந்துகொள்ளாமல் இருக்கிறபோதுதான், இவர்கள் விவாதங்களை ஒரு தலைப்பட்சமாக நடத்துகிறார்கள் என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் கூடுதலாகப் போய்ச்சேரும். தற்போது பாஜக பங்கேற்காத காரணத்தால் அது வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே, அதில் எங்களுக்கு வருத்தம் ஒன்றும் இல்லை" என்றார் நாராயணன் திருப்பதி.

சட்டமன்ற நிகழ்வுகள் தணிக்கை செய்யப்பட்டு, ஆளுங்கட்சிக்கு ஆதரவான காட்சிகள் மட்டுமே ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டன. அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரையாவது முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்து, திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருக்கிறது.

Related Stories

No stories found.