முதல்வரை கழுதையாக சித்தரித்தவர் கைது!

தெலங்கானா முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு மாணவர் காங்கிரஸ் எதிர்ப்பு
முதல்வரை கழுதையாக சித்தரித்தவர் கைது!
தெலங்கானாவில் மாணவர் காங்கிரஸாரின் கண்டன போராட்டம்

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவை கழுதையாக சித்தரித்து பிறந்தநாள் கொண்டாடியவரை, பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவின் பிறந்தநாள் பிப்.17 அன்று கொண்டாடப்பட்டது. முதல்வர் பிறந்தநாளை 3 தினங்களுக்கு மாநிலம் முழுக்க கொண்டாடுமாறு கட்சி சார்பில் உத்தரவானது. இதனையடுத்து மாநிலங்கள் பல்வேறு இடங்களில் கூடிய டிஆர்எஸ் கட்சியினர் இன்று வரை முதல்வர் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

முதல்வரின் பிறந்தநாள் தொடர் கொண்டாட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டி பிறந்தநாள் கொண்டாட்டமும் நடைபெற்றது. இந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் தெலங்கானா தலைவராக இருக்கும் பால்மூரி வெங்கட் என்பவர் தலைமையில் கழுதைக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டப்பட்டது.

பால்மூரி வெங்கட் தலைமையில் கூடிய சிலர் முதல்வர் சந்திரசேகர் ராவின் படத்தை கழுதையின் முகத்தில் அணிவித்து, அந்த பிராணிக்கு கேக் ஊட்டிவிட்டனர். மேலும் அதுதொடர்பான புகைப்படங்களை ட்விட்டரிலும் பகிர்ந்தனர். டிஆர்எஸ் கட்சியின் நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் கரீம் நகர் போலீஸார், பால்மூரியை பிப்.18 பின்னிரவில் கைது செய்தனர்.

கழுதையை திருடியது, சட்ட விரோதமாக கூடியது, பிராணிகள் வதை தடுப்பு, கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தைகம் விளைவித்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பால்மூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த பால்மூரி, ‘கழுதையை முன்னிறுத்தி போராட்டம் நடத்துவது தெலங்கானாவில் பிரபலமான போராட்ட உத்திகளில் ஒன்று. வேலையில்லா திண்டாட்டத்தின் மத்தியில் விவசாயிகள், தொழிலாளர்கள் சிரமப்பட்டு வரும்போது, 3 நாட்களுக்கு முதல்வர் பிறந்த தின கொண்டாட்டங்கள் நடைபெறுவது தவறு என்பதை உணர்த்தவே’ இவ்வாறு செய்ததாக தனது தரப்பை நியாயப்படுத்தி விளக்கமளித்துள்ளார்.

Related Stories

No stories found.