‘இங்கு முதல்வர் அல்ல... மன்னர்தான் ஆட்சி செய்கிறார்!’ - ராகுல் பாய்ச்சல்!

‘இங்கு முதல்வர் அல்ல... மன்னர்தான் ஆட்சி செய்கிறார்!’ - ராகுல் பாய்ச்சல்!

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று. இந்தச் சூழலில் அங்கு தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடுபிடித்துவருகிறது. ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்குக் கடும் போட்டியாக பாஜக வளர்ந்துவருகிறது. இத்தனைக்கும் கடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் பாஜக வென்றது ஒரே ஒரு இடத்தில்தான். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 88 இடங்களில் வென்றது. காங்கிரஸுக்கு 19 இடங்கள் கிடைத்தன.

இப்போதும் அங்கு மூன்றாவது கட்சியாகத்தான் பாஜக இருக்கிறது. எனினும், தேர்தலை முன்னிட்டு கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் பாஜக தலைமை முனைப்பு காட்டுகிறது. சமீபத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மஹ்பூப்நகரில் நடந்த பிரம்மாண்டக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தெலங்கானா மாற்றத்துக்குத் தயாராக இருப்பதாகவும், மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் என்று தெலங்கானா மக்கள் விரும்புவதாகவும் பேசினார்.

2014-ல் தெலங்கானா தனிமாநிலமாக உருவானது முதல் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ்தான் முதல்வராக இருக்கிறார். வரவிருக்கும் தேர்தலில் பலப்பரீட்சை நடத்த காங்கிரஸும் தயாராகிவருகிறது. இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாகத் தெலங்கானாவுக்குச் சென்றிருக்கிறார் ராகுல். இரண்டு நாள் பயணமாக அங்கு சென்றிருக்கும் அவர், நேற்று ஹைதராபாதில் நடந்த கூட்டத்தில் பேசும்போது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கும் காங்கிரஸுக்கும் இடையில்தான் நேரடிப் போட்டி என்று குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியும் பாஜகவும் மறைமுகமாகக் கைகோத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்குக் கிடைக்கும் வாக்கு என்றும் குறிப்பிட்டார்.

தெலங்கானா மாநிலம் உருவானபோது அது ஒரு முன்மாதிரி மாநிலமாக இருக்கும் என காங்கிரஸ் கட்சி கருதியது என்றும், ஒற்றை ஆளாக தெலங்கானா மக்களின் கனவை சந்திரசேகர் ராவ் சிதைத்துவிட்டதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.

ஒற்றைக் குடும்பம் பலன் பெறுவதற்காக தெலங்கானா வழங்கப்படவில்லை என்று சந்திரசேகர் ராவ் குடும்பத்தினரை விமர்சித்த அவர், “ஊழல் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியுடன் காங்கிரஸ் ஒருபோதும் கூட்டணி அமைக்காது” என்றார். மேலும், “தெலங்கானா மாநிலம் ஒரு முதல்வரால் ஆட்சி செய்யப்படவில்லை; மன்னரால் ஆளப்படுகிறது” என்றும் சாடினார்.

தனிப்பட்ட முறையில் நேபாளத்துக்குச் சென்றிருந்த ராகுல் அங்கு ஒரு திருமண விருந்தில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையானது. அதற்குப் பின்னர் அவர் கலந்துகொண்ட முதல் பொதுக் கூட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல் காந்தி, தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைந்தால் விவசாயிகளின் தற்கொலைகள் முடிவுக்கு வரும் என்றும் உறுதியளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in