தெலங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான மைனம்பள்ளி ஹனுமந்த ராவ் விலகி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் மூத்த தலைவர் மைனம்பள்ளி ஹனுமந்த ராவ். இவர் பிஆர்எஸ் சார்பில் மல்காஜிகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பாக தயாராகி வருகின்றன. பிஆர்எஸ் கட்சியின் சார்பிலும் முதற்கட்டமாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.21-ம் தேதி அறிவிக்கப்பட்ட 115 பேர் கொண்ட பிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் மல்காஜிகரி தொகுதி ஹனுமந்தராவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், நேற்று முன்தினம் இரவு திடீரென அவர் பிஆர்எஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். மேலும் பிஆர்எஸ் சார்பில் மல்காஜிகிரி தொகுதியில் போட்டியிடவும் அவர் மறுத்துவிட்டார். இன்றோ, நாளையோ ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைய அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளராக அவர் மல்காஜிகிரி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹனுமந்தராவ் தனது மகன் ரோஹித்துக்கு மேடக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட சீட்டு ஒதுக்குமாறு பிஆர்எஸ் கட்சியிடம் விண்ணப்பித்தார். ஆனால், அவரது விருப்பத்தை கட்சித் தலைமை நிராகரித்ததால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைய அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறிவரும் நிலையில், இத்தகைய தாவல்கள் நடைபெறுகின்றன. இனியும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.