வெட்கமற்றவர்கள்... காங்கிரஸை கடுமையாக விமர்சித்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்!

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

விவசாயிகளின் உரிமைகளை பறிக்கும் செயலில் ஈடுபடும் காங்கிரஸ் கட்சியினர் வெட்கமற்றவர்கள் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில், விவசாயிகளுக்காக, நிலப்பதிவு, சொத்து மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக கடந்த 2020ம் ஆண்டு ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் தரணி போர்டல் என்ற தனி இணையதளம் துவங்கப்பட்டது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் தற்போது தெலங்கானா மாநிலத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இணையதள விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக கையில் எடுத்துள்ளன.

தெலங்கானா அரசின் தாரணி போர்ட்டல்
தெலங்கானா அரசின் தாரணி போர்ட்டல்

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி ஆகியோர் காங்கிரஸ் கட்சி தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் தரணி இணையதளத்தை வங்கக்கடலில் வீசுவோம் என தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சன்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 ராகுல் காந்தி
ராகுல் காந்தி

விவசாயிகள் மேம்பாட்டுக்காக அரசு கொண்டு வந்த திட்டத்தை காங்கிரஸ் தூக்கி எறிவோம் என்று சொல்வதாகவும் அவர்கள் வெட்கமற்றவர்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் விவசாயிகளின் கைகளில் உரிமைகள் இருப்பதாகவும், தங்கள் கட்சி செய்தது, விவசாயிகளை மேம்படுத்துவதற்காகவே எனவும் அவர் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் வருகிற நவம்பர் 30ம் தேதி மொத்தமுள்ள 118 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in