‘விரைவில் நல்ல சேதி’: கேசிஆர் ஆருடம்!

‘விரைவில் நல்ல சேதி’: கேசிஆர் ஆருடம்!
உத்தவ் தாக்கரே - சந்திரசேகர் ராவ்

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உள்ளிட்டோரை சந்தித்த தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ’விரைவில் நல்ல சேதி வரும்’ என்று ஆருடம் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலை முன்வைத்து, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை திரட்டும் வகையில், பல்வேறு மாநிலங்களின் பிராந்திய கட்சித் தலைவர்கள் முயன்று வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், முன்னாள் பிரதமர் தேவ கௌடா. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் இதில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பங்கெடுத்து வருகின்றனர்.

அண்மைக் காலமாக பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான கே.சந்திரசேகர் ராவை, அந்த எதிர்ப்புகளில் ஏற்கனவே தீவிரமாக களமாடி வரும் சிவ சேனா கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே அண்மையில் நேரில் சந்தித்து பேச அழைப்பு விடுத்திருந்தார். அப்போது சந்திரசேகர் ராவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடங்கி இருந்ததால், இன்றைய(பிப்.20) சந்திப்புக்கு நாள் குறிக்கப்பட்டது.

அதன்படி, மும்பை சென்ற கேசிஆர் மராட்டிய முதல்வர் உத்தவின் அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவாரையும் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்புகளின்போது, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் உடனிருந்தார்.

தெலங்கானா - மராட்டிய முதல்வர்களின் சந்திப்பை அடுத்து இருவரும் கூட்டாக அளித்த பேட்டியில், ’இருமாநிலங்களுக்கு இடையிலான பாசனம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக’ தெரிவித்தனர். தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதித்ததாகவும், விரைவில் அதற்கான முன்னெடுப்புகளுடன் பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும்’ தெரிவித்தனர். நிறைவாக ‘இந்த சந்திப்புகளின் பயனால் விரைவில் நல்ல சேதி வரும்’ என்று கேசிஆர் நம்பிக்கை தெரிவித்தார்.

மராட்டியத்தில் நடைபெறும் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி இந்த சந்திப்புகளில் இடம்பெறவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலி, ‘பாஜகவுக்கு எதிரான அணி உருவாவது வரவேற்புக்குரியது. ஆனால் அந்த முன்னணி காங்கிரஸ் கட்சி இன்றி முழுமை பெறாது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் அடுத்த கட்டமாக, பாஜக அல்லாத பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஹைதராபாத்தில் சந்திக்க உள்ளதாக கேசிஆர் தெரிவித்தார். 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.