
பிஹார் முதல்வர் நிதீஷ் குமார், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரைச் சந்தித்ததற்குப் பதிலாக, கொலை, கடத்தல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பவங்களைச் சந்தித்திருக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியிருக்கிறார்.
பல கட்சிகளுக்குத் தேர்தல் வியூகம் வகுத்துத் தரும் ஐ-பேக் எனும் நிறுவனத்தை நடத்திவரும் பிரசாந்த் கிஷோர், பிஹாரைச் சேர்ந்தவர். நிதீஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்து அரசியல்வாதியாகவும் செயல்பட்டுவந்தார். கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும், 2020-ல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு நிதீஷ் குமார் ஆதரவளித்ததைக் கடுமையாக விமர்சித்ததற்காக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரசாந்த் கிஷோர் வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து, ‘பாத் பிஹார் கி’ (பிஹாரைப் பற்றிப் பேசுவோம்) எனும் முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் 100 நாட்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நிதீஷ் குமார் ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டிப் பிரச்சாரம் செய்ய களமிறங்கினார். இருவருக்கும் இடையில் கசப்பான உறவே நீடித்தது.
இந்தச் சூழலில், பிப்ரவரி 19 அன்று டெல்லியில் நிதீஷ் குமார் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடந்தது. இதையடுத்து, பிஹார் அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பில், எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை என்று நிதீஷ் குமார் கூறியிருந்தார். “பிரசாந்த் கிஷோருடனான எனது உறவு இன்று தொடங்கிய ஒன்றா என்ன? அவருடனான சந்திப்பில் எந்தச் சிறப்பு அர்த்தமும் இல்லை” என செய்தியாளர்களிடம் அவர் விளக்கமளித்திருந்தார்.
இதுதொடர்பாக, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, “நிதீஷ் யாரைச் சந்திப்பது என்பது அவரது சொந்த விஷயம். ஆனால், அன்றாடம் நடக்கும் கொலைச் சம்பவங்கள், கடத்தல் சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்களின் குடும்பத்தினரையும், மாஃபியாக்களால் துன்புறுத்தப்படுபவர்களின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.