பாஜகவால் திமுகவில் ஒழிந்ததா கோஷ்டி அரசியல்?

தேரோட்ட சர்ச்சையில் திடீர் திருப்பம்
மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

வேளிமலை குமாரசுவாமி கோயில் தேரோட்ட நிகழ்வில் திருத்தேர் வடம் தொட்டு இழுக்க வந்த அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று காலையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், பாஜக புண்ணியத்தால் திமுகவில் கோஷ்டிப் பூசல்களைக் கடந்து சில ஆக்கபூர்வமான விஷயங்களும் நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் கூட்டத்தில் மேடையில் இடம் தராததால் மேடைக்குக் கீழே சுரேஷ்ராஜன்...
நாகர்கோவில் கூட்டத்தில் மேடையில் இடம் தராததால் மேடைக்குக் கீழே சுரேஷ்ராஜன்...

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயில் திருவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து தேர் இழுக்க பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜ் தேரை இழுக்கக் கூடாது என அக்கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர். மேலும் மனோ தங்கராஜ் ஆன்மிக நம்பிக்கையற்றவர் என்றும் பாஜக குற்றம்சாட்டியது. போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ், எம்.எல்.ஏ காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதே நிகழ்வில் பங்கேற்று வடம்பிடித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவித்துண்டு கட்டியே தேர் இழுத்தார்.

பாஜக வெறுமனே மதத்தை முன்வைத்து அமைச்சரையே வடம் பிடிக்கக் கூடாது என போராடிய சம்பவம் நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியையும், தீவிர இந்து வாக்காளர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவையும் பெற்றுள்ளது. ஆனால் இவ்விவகாரத்தில் திடீர் திருப்பமாக திமுகவுக்குள் கோஷ்டிகளைக் கடந்து புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜுக்கும், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும் ஏழாம் பொருத்தம். சுரேஷ்ராஜனின் வசம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதிலும், அதன் பின் புதிய மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மேயர் மகேஷ் நியமனத்திலும் அமைச்சர் மனோ தங்கராஜின் தலையீடு அதிகம் இருந்ததாகப் பேசப்படுகிறது. நாகர்கோவிலில் நடக்கும் திமுக பொதுக்கூட்டங்களிலும்கூட மனோவும், மகேஷும் கைகோத்து சுரேஷ்ராஜன் பெயரை இருட்டடிப்பு செய்வதும், மேடையிலேயே இடம் தராமல் இருப்பதும் அண்மைக் காலமாகத் தொடர்ந்து வருகிறது.

இப்படியான சூழலிலும் பாஜகவினரால் மனோ தங்கராஜுக்கு சிறுவருத்தம் ஏற்பட்டதும் முதல் குரல் எழுப்பி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் சுரேஷ்ராஜன்.

இதுகுறித்துத் தன் ஃபேஸ்புக் பதிவிட்டிருக்கும் சுரேஷ்ராஜன், ‘சமூகநீதியை முன்னிறுத்தி ஆட்சி செய்யும் தமிழக அரசின் பிரதிநிதிகளான அமைச்சர்கள் வடம் இழுப்பதில் எந்தத் தவறும் இல்லை. இதில் மதத்தைப் புகுத்தி அரசியல் செய்வது என்பது அநாகரிகமான செயல். இப்படிப்பட்ட செயல்கள் மூலமாக ஒற்றுமையோடு வாழும் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்கள் இடையே எந்தவித மதத் தூண்டுதல்கள் நடைபெறாமல் இருப்பதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும். அப்படி மாவட்டத்தின் வளர்ச்சியைத் தடுத்து மதக்கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

பாஜக புண்ணியத்தால் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் அமைச்சர் தரப்பும், முன்னாள் அமைச்சர் தரப்பும் இணைந்தால் சரிதான் என உற்சாகத் துள்ளல் போடுகின்றனர் உடன்பிறப்புகள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in