நத்தத்தில் பேவர் பிளாக் மீதே தார்ச்சாலை

பகிரங்கமாக மீறப்பட்ட தலைமைச் செயலாளர் உத்தரவு
நத்தத்தில் பேவர் பிளாக் மீதே தார்ச்சாலை

தமிழகத்தின் நகர்ப்புற மக்களின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று, நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக உயர்ந்துகொண்டே செல்லும் சாலைகள். இப்படி சாலைகளின் உயரம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், அதையொட்டியுள்ள வீடுகள் சாலையின் மட்டத்தைவிட தாழ்வான நிலையில் இருக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் அனைத்தும் வீட்டிற்குள் மடை திறந்த வெள்ளமாய் பாய்ந்துவிடுகிறது. குறிப்பாகப் பழங்காலக் கோயில்கள் அனைத்தும் மிக மிகத் தாழ்ந்த நிலைக்குப் போய்விட்டன. படியேறிச் சென்று சாமி கும்பிட்ட நிலை மாறி, இன்று பெரும்பாலான கோயில்களில் படியிறங்கிப் போய்தான் சாமி கும்பிடும் நிலை இருக்கிறது.

இதனால் நகரங்களில் வாழும் மக்கள் லட்சக்கணக்கில் செலவிட்டு தங்கள் வீடுகளை உயரப்படுத்தும் பணிகளைச் செய்து வருகிறார்கள். சிலர், எதிர்காலத்தில் சாலை உயரம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை உத்தேசமாகக் கணக்கிட்டு தங்கள் வீட்டு உயரத்தைத் தேவைக்கு அதிகமாகவே உயர்த்திக் கட்டினார்கள். இதனால், வாகனங்கள் உள்ளே செல்ல மிகப்பெரிய சாய்தளங்களை அமைப்பதற்காகச் சாலையை ஆக்கிரமிக்கிற போக்கும் நடந்தது.

இந்தச் சூழ்நிலையில், சாலைகளின் மேற்பரப்பைச் சுரண்டி எடுத்த பின்னரே புதிய சாலைகள் போட வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடந்த மே மாதம் உத்தரவிட்டார். குறிப்பாக, நெடுஞ்சாலைத் துறை மூலமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளும்போது சாலைகளின் மேற்பரப்பைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் அமைக்கும் வகையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார். எந்தச் சூழ்நிலையிலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் மட்டம் அதிகரிக்கப்படக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறியிருந்தார். ஆனால், அது எந்தளவுக்கு மீறப்படுகிறது என்பதற்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அமைக்கப்படும் சாலையே சான்று.

நத்தம் பேருந்து நிலையம் அருகே உள்ள மழையால் பழுதடைந்த சாலையைப் புதிதாக அமைக்கும் பணி, இன்று நடந்தது. அப்போது ஏற்கெனவே போட்ட சாலையைச் சுரண்டாமல் அதன் மீதே சாலை அமைத்தவர்கள், சாலையை ஒட்டி ஏற்கெனவே இருந்த பேவர் பிளாக்கையும் அகற்றாமல், பேவர் பிளாக் மீதே தார்க் கலவையை விரித்துவிட்டுப் போய்விட்டார்கள் ஒப்பந்தக்காரர்கள். இதனால், மிக விரைவாகவே இந்தச் சாலை பழுதடைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நத்தத்தைச் சேர்ந்த சுரேஷ் கண்ணன் கூறுகையில், ”தலைமைச் செயலாளர் இறையன்புவின் அறிவிப்பை ஆவலுடன் வரவேற்றவர்களில் நானும் ஒருவன். இப்போது எங்கள் ஊரிலேயே இப்படிப் பட்டப்பகலிலேயே விதிமீறல் நடக்கிறது. கேட்க முடியவில்லை. திமுக ஆட்சியில் முதல்வர் மற்றும் செயலர் போன்ற உயர்பதவியில் இருப்பவர்கள் மிகச்சிறப்பாகச் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள். ஆனால், கீழ் மட்டத்தில் என்ன நடக்கிறது என்பதற்கு இந்த நத்தம் சாலையே சான்று. அந்தச் சாலையை அகற்றிவிட்டு, உயரத்தைக் குறைத்துப் போட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in