
நிர்வாக மாறுதலில் செல்லும் மாநகராட்சி ஆணையரை, மாமன்றத்தின் மேயர் மற்றும் உறுப்பினர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்துள்ளனர். இந்த உருக்கமான சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது.
தஞ்சை மாநகராட்சி ஆணையராக சுமார் இரண்டரை ஆண்டு காலம் பதவி வகித்தவர் சரவணக்குமார். இவரது நிர்வாகத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சி பல வியத்தகு சாதனைகளை புரிந்திருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் சரவணக்குமாருக்கு நல்ல பெயர்.
பொதுமக்கள் மட்டுமன்றி மாமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் மேயர் சன்.ராமநாதன் உள்ளிட்டோரும், ஆணையருடன் நல்ல நட்பை பேணி வந்துள்ளனர். சரவணக்குமாரின் நேர்மையான நடவடிக்கைகளால் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயருக்கும் மக்கள் மத்தியில் நல்ல அபிமானம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் நிர்வாக காரணங்களின் அடிப்படையில், தஞ்சையிலிருந்து கரூருக்கு மாற்றம் செய்யப்பட்டார் ஆணையர் சரவணக்குமார். இதனையொட்டி தஞ்சையில் நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்வில், ஆணையரின் சீரிய செயல்பாடுகள் மற்றும் தஞ்சை மாநகருக்கு அவர் ஆற்றிய உழைப்பு குறித்தெல்லாம் உறுப்பினர்கள் மற்றும் மேயர் ஆகியோர் உருக்கமுடன் நினைவுகூர்ந்தனர்.
நன்றியுரையாக ஆணையர் சரவணக்குமார் மைக் பிடித்து விடைபெறல் குறித்து பேச ஆரம்பித்ததும் கூடியிருந்தோர் கண்ணீர் விட்டார்கள். மேயர் சன்.ராமநாதனும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிகாரிகள் - அரசியவாதிகள் மத்தியில் ஏழாம் பொருத்தம் நீடிக்கும் இக்காலத்தில், இப்படியான கண்கொள்ளா காட்சியை கண்டவர்களும் உருகி நெகிழ்ந்திருக்கிறார்கள்.