தமிழ்நாடு நாள்: ஒற்றுமையாக கொண்டாட முடியாதா?!

தமிழ்நாடு நாள்: ஒற்றுமையாக கொண்டாட முடியாதா?!

கர்நாடக மாநிலத்தின் மூத்த தமிழ்ச் செய்தியாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பின்னணியில், ஒரே கொண்டாட்டச் சத்தம். ”என்ன அண்ணா, உங்க ஊரில் தீபாவளி கொண்டாட்டம் அதற்குள்ளாகத் தொடங்கிவிட்டதா?” என்று கேட்டேன். ”இல்ல தம்பி, இங்கே நடப்பது ‘கர்நாடக நாள்‘ கொண்டாட்டம். இன்று நேற்றல்ல ஒரு மாதமாகக் கொண்டாடுகிறார்கள். திரும்பிய திசையெல்லாம் மஞ்சள் சிவப்பு வண்ண கர்நாடக மாநிலக் கொடி, காதில் விழுவதெல்லாம் கர்நாடக மாநிலத்தின் புகழ்பாடும் பாடல்கள், அத்தனை பேர் சட்டையிலும் கர்நாடக நாள் குறித்த பேட்ஜ், தெருவுக்குத் தெரு கன்னட புகழ் பாடும் இசை நிகழ்ச்சிகள், டி.வி., பத்திரிகைகள், ஆட்டோ, பேருந்து எல்லாவற்றிலும் கர்நாடக நாள் கொண்டாட்டம். அவ்வளவு ஏன்... கத்தோலிக்கத் திருச்சபை ஆலயங்களில்கூட, திருப்பலி பீடத்தையே கர்நாடக கொடி மாதிரி வடிவமைத்திருக்கிறார்கள். கடந்த 28-ம் தேதி கூட, 5 லட்சம் பேர் ஓரிடத்தில் கூடி, கர்நாடகப் பாடலைப் பாடி முதல்வர் முன்னிலையில் மாநிலக் கொடியையும் ஏற்றியிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர், மாநில ஆளுநர் கூட பங்கேற்றிருக்கின்றனர். இந்த மாதம் முழுக்க கர்நாடக பெருமிதத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சேம்பிளுக்கு, என் வீட்டு வாசல் எப்படியிருக்கிறது என்று பாருங்களேன்” என்று வீடியோ காலில் காட்டினார். விழாத் திடலுக்குள் அவர் நிற்பதுபோலவே எனக்குத் தோன்றியது.

“அது சரி தம்பி, அங்கே ‘தமிழ்நாடு நாள்‘ கொண்டாட்டம் எப்படி?” என்று கேட்டார் அண்ணன்.

”எங்களுக்கு ரெண்டு தமிழ்நாடு நாள் அண்ணா. அதையும் கொண்டாட மாட்டோம். நீ கொண்டாடும் நாள் தப்பு என்று நாங்கள் அவர்களையும், அவர்கள் எங்களையும் மாறி மாறி விமர்சிப்பதிலேயே அந்த நாள் ஓடிப்போய்விடும்” என்றேன்.

கர்நாடக நாள் கொண்டாட்டத்தில், அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை.
கர்நாடக நாள் கொண்டாட்டத்தில், அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை.

இதுவெறுமனே வேடிக்கைக்காகச் சொன்ன வார்த்தைகள் அல்ல. தமிழ்கூறும் நல்லுலகின் ’சிறப்பு’ அது. எல்லோருக்கும் ஒரு புத்தாண்டு என்றால், நமக்கு மட்டும் 2 புத்தாண்டுகள். தை முதல்நாளை ஒரு தரப்பினரும், சித்திரை முதல்நாளை இன்னொரு தரப்பினரும் கொண்டாடுகிறார்கள். தை முதல்நாள்தான் தமிழர் புத்தாண்டு என்பதற்கு அவர்கள் கூறும் காரணத்தை இவர்கள் ஏற்பதில்லை, சித்திரை முதல்நாளைத் தானே இத்தனை காலமாகக் கொண்டாடினோம் என்பதை அவர்கள் ஏற்பதில்லை. அப்படித்தான் ’தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டமும். மொழிவாரி மாநிலங்கள் உருவான நவம்பர் 1-ம் தேதி இதுநாள் வரையில் தமிழ்நாடு தினம் என்று கொண்டாடப்பட்டுவந்த நிலையில், தமிழர் வாழும் இந்த நிலப்பரப்புக்கு ’தமிழ்நாடு’ என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாளான ஜூலை 18-ம் தேதியே இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கலைஞரின் தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பைப் போலவே இதுவும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

அதிமுக, நாதக எதிர்ப்பு

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ”1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிரிக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணம்தான் இன்றைய தமிழ்நாடு. தற்போதைய தமிழ்நாடு தோன்றிய நாளான நவம்பர் 1-ம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதாலேயே, அதிமுக அரசு அப்படி அறிவித்திருந்தது. இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முதல்வர் இப்படி அறிவித்திருக்கிறார். ஒரு குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கப்படுகிறது. 10 வருடங்கள் கழித்து, அந்தக் குழந்தையின் பெயர் மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிட்டாலும், குழந்தை பிறந்தநாளைத்தான் பிறந்தநாளாகக் கொண்டாடுவோமே தவிர, பெயர் மாற்றிய நாளை கொண்டாட மாட்டோம். எனவே, தமிழக அரசின் அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

பாமக நிறுவனர் ராமதாஸோ, நவம்பர் 1-ம் தேதியையே தமிழ்நாடு நாளாக கொண்டாடுவோம் என்று அறிவித்திருப்பதுடன், தமிழ்நாடு இழந்த பகுதிகளையும் மீட்க வேண்டும். அப்போதுதான் நதி நீர் உள்ளிட்ட பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

’நாம் தமிழர்’ ஒருங்கிணைப்பாளர் சீமானோ, தன்னுடைய பாணியில் கோபமாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார். ”மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றைத்தான் கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லா மாநிலங்களும் கொண்டாடுகிறது. அதைத்தானே நாங்களும் கொண்டாடுவோம். அய்யா ஸ்டாலின் பிறந்தநாளை கட்சிக்காரங்க கொண்டாடுவாங்களா? அல்லது அவருக்குப் பேர் வெச்ச நாளைக் கொண்டாடுவாங்களா? இதே ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளை எழுச்சியாகக் கொண்டாடி மதவாத சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்ற பேசினாரே? எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சா? நீங்கள் வேண்டுமானால் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நாளை தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் என்று கொண்டாடுங்கள் தப்பில்லை. ஆனால், தமிழ்நாடு நாளை மாற்றுவது தவறு. இன்று வேண்டுமென்றால் நீங்கள் சட்டம் இயற்றலாம், தொடர்ச்சியாக உங்களிடமே ஆட்சியும், அதிகாரமும் இருக்காது. ஒருநாள் எங்களிடமும் ஆட்சி அதிகாரம் வரும். அப்போது இந்த அறிவிப்பை கிழித்தெறிந்துவிடுவோம்” என்று கோபமாகச் சொன்னார். பாஜக அண்ணாமலையைக் கேட்கவே வேண்டாம். திமுக என்ன சொன்னாலும் எதிர்ப்பதுதானே அவர் வேலை? அதைச் செவ்வனே செய்திருக்கிறார். காங்கிரஸ் இன்னும் வாய் திறக்கவில்லை. மாநில நாள் கொண்டாட்டத்தில் தேசியக் கட்சிகளின் கருத்தை கேட்க வேண்டிய அவசியமும் கிடையாது.

வைகோ நழுவல், திருமா யோசனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பை ஏற்காத தமிழ் ஆர்வலர்கள் சிலர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும், விசிக தலைவர் தொல்.திருமாவளவனையும் தொடர்புகொண்டு முறையிட்டிருக்கிறார்கள். விளைவாக வைகை ஓர் அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு உருவான நவம்பர் 1-ம் தேதியின் வரலாற்றை தனது பாணியில் விரிவாகச் சொல்லிவிட்டு, ”எனவே, நவம்பர் 1 மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளையும் கொண்டாட வேண்டும். அந்த நாளில் எல்லைப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிபெற்ற தலைவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றிட, 1967 ஜூலை 18-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நாளையும் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவோம்” என்று கூறியிருந்தார். முதல்வரின் அறிவிப்பையும் பாராட்டியிருந்தார்.

”தன் குதிரையை இன்னொருத்தன் திருடிவிட்டான் என்று ஊர்ப் பெரிய மனிதரிடம் பஞ்சாயத்துக்குப் போனாங்களாம் ரெண்டு பேரு. ஆமாம்பா இது உன்னோட குதிரைதான் என்று அவர் தீர்ப்பு சொல்வார் என்பது புகார் செய்தவரின் எதிர்பார்ப்பு. ஆனால், அவரோ முன்னாடி பார்த்தா உன் குதிரை மாதிரி இருக்குது. பின்னாடி இருந்து பார்த்தா அவன் குதிரை மாதிரி இருக்கு என்று தீர்ப்புச் சொன்னாராம். அப்படியிருக்கிறது வைகோவின் பேச்சு” என்று தமிழ் ஆர்வலர்கள் சிலர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

திருமாவளவனோ தன்னுடைய நிலைப்பாட்டை ரத்தினச் சுருக்கமாக, ’ட்விட்’ செய்திருக்கிறார். அதில், ”தமிழ்நாடு நாள் தொடர்பான அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சித் தலைவர்கள், எல்லை மீட்பு போராளிகள், இன உணர்வாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் போன்றோரை அழைத்துக் கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது” என்று வலியுறுத்தியிருந்தார் திருமா.

இதற்கிடையே, நாம் தமிழர் கட்சிக்காரர்களும், தமிழ் தேசியம் பேசுவோரும் நவம்பர் ஒன்றாம் தேதியே தமிழ்நாடு நாள் என்று இன்று கொண்டாடுகிறார்கள். சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைப் பரிமாறுகிறார்கள். அதற்குப் பதிலடியாக திமுகவினரும், அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நாளின் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்க முடியாத திராவிட இயக்கத்தினரும் இன்று தமிழ்நாடு தினமல்ல, நம்முடைய மண்ணை எல்லையோர மாநிலங்களிடம் இழந்த நாளை எப்படிக் கொண்டாட முடியும் என்றும் கூறிவருகின்றனர்.

தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு முதல்வரிடம் முறையிட்டபோது...
தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு முதல்வரிடம் முறையிட்டபோது...

தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு...

இந்தப் பிரச்சினைக்கெல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ காரணமாகியிருப்பது ’தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு’. மதுரையை மையமாகக் கொண்ட இந்த அமைப்புதான், கடந்த 28-ம் தேதி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியது. அதன் விளைவாகவே முதல்வர் அந்த சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டார்.

”ஏன் இப்படியொரு கோரிக்கையை வைத்தீர்கள்?” என்று அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவருமான பி.வரதராசனிடம் கேட்டபோது, ”தமிழர்கள் நிலத்தால், வளத்தால், மொழியால், இனத்தால் பெருமைக்குரியவர்கள். அப்பெருமைக்குரியவர்களின் நாடு, தமிழ்நாடு என்று அழைக்கப்படாமல் சென்னை மாகாணம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்டது. தமிழ்நாடு என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் 1955 முதல் முன்வைக்கப்பட்டன. 1955 அக்டோபர் திங்களில் முதன் முறையாக தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென தந்தை பெரியார் வேண்டுகோள் வைத்தார். 1957-ல் திமுக முதன்முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தபோது, அதனுடைய முதல் தீர்மானம் ’மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ’தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்ற வேண்டும் என்பதுதான். 1961 ஜனவரியில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்துக்காக திமுக தொடர்ந்து 3 நாட்கள் சட்டமன்றத்தைப் புறக்கணித்தது. அதனால், முதல்வர் காமராசர் ’மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை தமிழ்நாடு என நிர்வாக கடிதங்களில் குறிப்பிடுவதற்கு மட்டும் ஒப்புக்கொண்டார். 1964-ல் திமுக உறுப்பினர், ’தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், சென்னை ஜார்ஜ் கோட்டையில் இருந்த பெயர்ப் பலகையை ’தமிழக அரசு’ என்று மாற்றியது. 1967 ஜூலை 18-ல் சென்னை மாநிலம் என்ற பெயரை ’தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களால் நிறைவேற்றப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் முழு மனதோடு தீர்மானத்தை ஆதரித்தனர். அப்போது சட்டமன்றத்தில் பேசிய அண்ணா, ’இந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றியல்ல. தமிழின் வெற்றி. தமிழரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ்நாட்டின் வெற்றி. நாம் இப்படி பெயர் மாற்றத்துக்கு பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள்’ என்று பேசினார். அதைத் தொடர்ந்து, 23.11.1968-ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி, 1969 ஜூலை 18-ல் சென்னை மாகாணம் தமிழ்நாடாக அதிகாரப்பூர்வமாக மாறியது.

எனவே, பேரறிஞர் அண்ணா ’தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய நாளையே தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று அரசு ஆணையிட வேண்டும் தமிழ் உணர்வாளர்கள் விரும்பினர். இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம். முதல்வரைச் சந்திக்கவும் நேரம் கேட்டிருந்தோம். கடந்த 28-ம் தேதி எங்களைத் தொடர்புகொண்ட அமைச்சர், ’நாளை (29-ம்) தேதி முதல்வர் மதுரை வருகிறார். அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 6 மணிக்கு வாருங்கள் அவரைச் சந்திக்கலாம்’ என்று நேரம் வாங்கிக்கொடுத்தார். முதல்வரின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, மாலை 5 மணிக்கே வரச்சொன்னார்கள். தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருமலை, மதுரை 4-ம் தமிழ்ச்சங்க செயலாளர் வழக்கறிஞர் ச.மாரியப்பமுரளி, தியாகராசர் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வரும், சிவனிய அறிஞருமான மு.அருணகிரி, யாதவர் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவரும், திராவிட இயக்க அறிஞருமான இ.கி.ராமசாமி, உலகத் திருக்குறள் பேரவை அமைப்பின் தலைவரும், முன்னாள் ஆட்சியருமான கா.கருப்பையா, வடக்காடி வீதி திருவள்ளுவர் கழகத் துணை செயலாளர் சந்தானம், செந்தமிழ் கல்லூரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, லேடி டோக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் அ.கவிதா ராணி ஆகியோருடன் நானும் போய் முதல்வரிடம் மனு கொடுத்தேன். அதன் அடிப்படையில்தான் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்” என்றார்.

ஆனால், ”முதல்வரின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதே?” என்று பி.வரதராசனிடம் கேட்டபோது, ”எங்களது கோரிக்கை நவம்பர் 1-ம் தேதியை கொண்டாடக்கூடாது. அதற்குப் பதில் ஜூலை 18-ஐத்தான் ’தமிழ்நாடு நாளாக’ கொண்டாட வேண்டும் என்பதல்ல. நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாடு பிரிக்கப்பட்டபோது, நம் மண்ணின் பல பகுதிகளை நாம் அண்டை மாநிலங்களிடம் இழந்துவிட்டோம். மொழிவாரி மாநிலப் பிரிவினையால் தமிழ்நாடு பெற்றதைவிட இழந்ததே அதிகம். இழந்த பகுதிகளை மீட்க தனிப் போராட்டமே நடத்தப்பட்டது. எனவே, அந்த நாளில் எல்லைப் போராட்ட தியாகிகளை நாம் நினைவுகூர்ந்து அவர்களைப் பாராட்டும் நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்றுதான் மனுவில் கூறியிருந்தோம். தமிழ்நாடு அரசும் அந்த முடிவில்தான் இருக்கிறது. அதற்குள்ளாக அவசரப்பட்டு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்தான் இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறார்கள்” என்றார்.

திருமாவளவன் வேண்டுகோளை ஏற்று, அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் அரசு கேட்க வேண்டும். பெரும்பான்மையினரின் கருத்து ஏற்கப்பட வேண்டும். ஒரு சிலர் விரும்பவில்லை என்றால், அவர்களுக்கு விளக்கமளித்து போதிய அவகாசம் கொடுத்து ஒருமித்த முடிவு காண வேண்டும். அண்ணா எப்படி இந்த மண்ணுக்கு ஒட்டுமொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினாரோ, அதே ஒற்றுமையுடன் ஒருநாள் முடிவு செய்யப்பட வேண்டும். அதை நாம் உணர்வுப்பூர்வமாகக் கொண்டாட வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. அனைவரும் ஒப்புக்கொண்டால், நவம்பர் 1-ம் நாளை நம் தமிழ் மண்ணின் பெரும்பகுதியை இழந்த கறுப்பு நாளாகக் கூடக் கடைப்பிடிக்கலாம்.

அரசியல் வேறு, தமிழ் உணர்வு வேறு.

செய்யுமா திமுக அரசு?

Related Stories

No stories found.