கேப்டனுக்காக காத்திருக்கும் கப்பல்... எழுந்து வரட்டும் விஜயகாந்த்!

விஜயகாந்த்
விஜயகாந்த்
Updated on
3 min read

மருத்துவமனையில் இருக்கும் விஜயகாந்த் உடல்நிலை தேறி இயல்புக்கு திரும்ப வேண்டும் - தேமுதிகவினர் மட்டுமல்ல... சகல கட்சிகளிலும் இருக்கும் அவரது அபிமானிகள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனை இதுவாகத்தான் இப்போது இருக்கிறது. சினிமா, சமூகப் பணி, அரசியல் ஆகியவற்றின் வாயிலாக பெரும் எதிர்பார்ப்புகளை விதைத்த விஜயகாந்துக்காக, கேப்டனை எதிர்நோக்கும் கப்பலாக தேமுதிகவும், அதன் எதிர்காலமும் தள்ளாட்டம் கண்டுள்ளன.

70களின் இறுதியில் மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு கோடம்பாக்கம் கதவுகளைத் தட்டிய விஜயராஜ், தனது கருப்புத் தங்கம் மேனிக்காக புறக்கணிப்புகளைச் சந்தித்தார். அறிமுகமானதில் தொடங்கி இரண்டொரு படங்களில் அவரது சொந்தக் குரலும் புறக்கணிக்கப்பட்டு, டப்பிங் குரலுக்கு வாயசைத்தார்.

அத்தனை அடித்தளத்திலிருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய விஜயகாந்த், பின்னர் தனது கம்பீரக் குரலுக்கு சினிமா முதல் அரசியல் வரை ஆட்டிப்படைத்தது வரலாறு ஆகிப்போனது. நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் திரைப்படங்களில் சமூக விழிப்புணர்வுக்கான தாக்கம் விஜயகாந்த் படங்களில் வேரூன்றியது.

விஜயகாந்த்
விஜயகாந்த்

சாமானியர்கள் மத்தியிலிருந்து புறப்பட்டு வந்த விஜயகாந்தும் உளமார தனது படங்களில் அரசியல், சமூகக் கருத்துக்களை சேர்த்துக்கொண்டார். லியாகத் அலிகான் போன்றோரின் கூர்மையான வசனம், ஆர்.கே.செல்வமணி முதல் ஏ.ஆர்.முருகதாஸ் வரையிலான இயக்குநர்களின் கைவண்ணம் எனத் திரையில் அரசியல் முழங்க ஆரம்பித்தார். இதர நடிகர்கள் போன்று திரைப்படத்தின் ஓட்டத்துக்காக ரசிகர்களை உசுப்பேற்றுவதற்காக அன்றி, மெய்யாலுமே அரசியல் களத்துக்கு முன்னேறினார் விஜயகாந்த்.

புத்தாயிரத்தில் ரசிகர்களை அரசியல் பாதைக்கு திருப்ப ஆர்வமானார். அரசியல் பாதையை முடிவெடுத்த வேகத்தில் தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கினார். தேசியம், திராவிடம், முற்போக்கு, கழகம் என பதங்களை குலுக்கிப்போட்டு கோத்தும், ஊழல் மற்றும் ஏழ்மை ஒழிப்பு என்று மேலோட்டமான கொள்கைகளை அறிவித்தும் அரசியலில் கால்வைத்தார். ஆனபோதும், ரசிக மகாஜனங்கள் அவரை ஏற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் அதிமுக - திமுக கட்சிகளுக்கு மாற்றான ஓட்டுவங்கி என்பது எப்போதும், ஒற்றை இலக்கத்துக்கு மேலாக இருக்கும். அதிகபட்சமாக 15 சதவீதத்தை எட்டும் அவற்றை குறிவைத்து, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள் போட்டுக்கொடுத்த அரசியல் புளூபிரின்ட் விஜயகாந்துக்கு பிடித்துப்போனது.

மதுரை மண்ணில் அதிரடியாய் கட்சியை ஆரம்பித்தவர் அடுத்த ஒரு வருட காலத்திலேயே சட்டப்பேரவைத் தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு ஆச்சரியமூட்டினார். அந்தத் தேர்தலில் விருதாசலத்தில், விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றாலும் ஒட்டுமொத்தமாக சுமார் எட்டரை சதவீத வாக்குகளை பெற்றதில் தேமுதிக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியானது.

முன்னதாக பாமக வாக்குவங்கி அதிகமுள்ள வட தமிழகத்தில் விஜயகாந்துக்கான ரசிகர் மன்றங்கள் அதிகரித்ததும், அவற்றுக்கு எதிராக கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் முதல் காடுவெட்டி குரு முதலான தளபதிகள் வரை கடுகடுத்ததும் விஜயகாந்தை உசுப்பி விட்டன. சினிமா நட்சத்திரங்களை நம்பி வீணாகும் இளைஞர்கள் என ரஜினிகாந்துக்கு எதிராகவே பாமக முதலில் களமாடியது.

ஜெயங்கொண்டத்தில் பாபா படப்பெட்டியை பாமகவினர் தூக்கியபோது, தமிழ்த் திரையுலகை திரட்டி விஜயகாந்த் கண்டனம் தெரிவித்தார். இதனால் ரஜினிகாந்தை விட்டு விட்டு விஜயகாந்தை பாமக எதிர்க்க ஆரம்பித்தது. அதுவே, பின்னாளில் பாமகவின் கோட்டையில் ஓட்டை போடுமளவுக்கு விஜயகாந்தை சீண்டியும் விட்டது.

விஜயகாந்த்
விஜயகாந்த்

பின்னாளில் அதே பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில், விஜயகாந்தின் தேமுதிக இணைந்தபோது இரு கட்சிகளின் தொண்டர்களும் குழம்பிப் போனார்கள். விஜயகாந்துக்கு அங்கிருந்து சறுக்கல் ஆரம்பித்தது. 2006 சட்டப்பேரவை தேர்தலில் 8.4 சதவீதம் வாக்குவங்கியை தக்கவைத்தது தேமுதிக. அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் கூடுதலாக 2 சதவீதத்தை உயர்த்திக்காட்டி விஜயகாந்த் இன்னும் விஸ்வரூபம் எடுத்தார்.

அடுத்து வந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தவர், திமுகவை புறந்தள்ளி எதிர்கட்சித் தலைவராக உயர்ந்தார். அந்தக் கூட்டணி புளித்தபோது, சட்டப்பேரவையில் அதிமுகவினருக்கு எதிராக விஜயகாந்த் நாக்கை துறுத்தி, திரையில் மட்டுமல்ல தரையிலும் ஹீரோவாக அடையாளம் காணப்பட்டார்.

வெகுஜனங்கள் மத்தியிலான இந்த நாயக பிம்பமும், அதனை நம்பி மட்டுமே தேமுதிக இருந்ததும் கூடிய விரைவில் கட்சியை கலகலக்கச் செய்தது. கறுப்பு எம்ஜியார் என அதிமுகவை அலறச் செய்தார் விஜயகாந்த். திமுகவை பொருட்டாக மதிக்காது அரசியல் களத்தில் சுழன்றடித்தார். கருணாநிதி - ஜெயலலிதா ஆகியோரின் சமகாலத்தில் அவர்களுக்கு ஈடுகொடுத்து விஜயகாந்த் சுழன்றடித்தது, தமிழக அரசியல் வரலாற்றில் புதிரானது.

இதுவே அடுத்த முதல்வர் விஜயகாந்த் என தூபம் போடவும் காரணமானது. மக்கள் நலக் கூட்டணியைக் கட்டமைத்து மதிமுக, விசிக, இடதுசாரிகள் ஆகியோரால் அடுத்த முதல்வராக விஜயகாந்த் முன்மொழியப்பட்ட போதே அவர் சுதாரித்திருக்க வேண்டும். அங்கே தொடங்கியது சறுக்கல். பிறகு, விஜயகாந்த் உடல் நலிவுற்றதையும் கட்சி அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் எ.சுதீஷ் கட்டுப்பாட்டுக்குப் போனதையும் கேப்டன் விசுவாசிகளால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குடும்பத்துடன் விஜயகாந்த்...
குடும்பத்துடன் விஜயகாந்த்...

அதனால் அவிழ்த்துக் கொட்டிய மூட்டை நெல்லிக்காய்களாக அவர்கள் நாலா பக்கமும் சிதறிப்போனார்கள். விஜயகாந்தின் பிம்பத்தை முன்னிறுத்தி அரசியல் அனுபவமற்ற பிரேமலதா போன்றவர்கள், கட்சியை மேலும் சிதைப்பதாக அவர்கள் பொருமினார்கள். சிறுநீரக சிகிச்சை முடிந்து வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிறகு, விஜயகாந்துக்கு வெகுவாய் ஓய்வு தேவைப்பட்டது.

விஜயகாந்த் பெயரிலான அறிக்கைகளுக்கு அப்பால், கேப்டன் குரலை ரசிகர்கள் தேட ஆரம்பித்தனர். விஜயகாந்தின் 2 மகன்களும் சினிமா, அரசியல் என களமாட ஆசைப்பட்டபோதும், இதர கட்சிகள் போன்று வாரிசுக்கான நம்பிக்கையை அவர்களால் கோக்க முடியவில்லை. கேப்டன் ஓய்வில் இருப்பதால், சாதாரண அலைக்குக்கூட தேமுதிக கப்பல் தள்ளாடுகிறது.

விஜயகாந்த் - விஜய்
விஜயகாந்த் - விஜய்

சினிமாவிலிருந்து அரசியலுக்கு அடியெடுத்த விஜயகாந்த், ரசிகர்களின் அரசியல் கனவுகளுக்கு தூபமிடும் விஜய் போன்ற நடிகர்களுக்கு பல வகையிலும் பாடமாகி இருக்கிறார். 18 ஆண்டுகளில் எழுச்சியும், வீழ்ச்சியுமாக தேமுதிக பயணித்த பாதை தமிழக அரசியல் வரலாற்றிலும் தவிர்க்க முடியாதது. அரசியல் கிடக்கட்டும்... இப்போதைக்கு விஜயகாந்த் எழுந்துவந்து அவருக்கே உரிய மந்திரப் புன்னகையோடு, “மக்களே...” என்று ஒரு முறை கர்ஜிக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் பேராவா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in