’நீட்’ ஒழிப்புக்குக் கிளர்ந்தெழும் மாணவர் படை!

’நீட்’ ஒழிப்புக்குக் கிளர்ந்தெழும் மாணவர் படை!

சென்னை ராஜ்பவன் முன்பாக, இந்திய மாணவர் சங்கம் இன்று (அக்.27) நடத்தும் ’நீட்’ ஒழிப்பு (Ban NEET) அகில இந்தியப் போராட்டம், இரண்டு வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

கல்வியியல் செயல்பாட்டுக்கு எதிரான, தகுதி, திறமைகளை புறம் தள்ளி, கல்வியில் வியாபாரத்தை ஊக்குவித்து மாணவர்களை கடுமையான நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கிவருகிறது ’நீட்’ தேர்வு. இது ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, தமிழ்நாடு மாநிலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் கோரிக்கை என்ற முழக்கத்துடன் மாணவர்கள் களம் இறங்கியுள்ளனர்.

ஒரு மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க, அகில இந்திய அளவில் மாணவர்கள் நடத்தும் முதல் போராட்டம் இது.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மாநில அரசின் இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சட்ட மசோதாவுக்கு, உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவேண்டும் என்று அகில இந்திய அளவில் இந்திய மாணவர் சங்கம் நடத்தும் போராட்டம் வெல்லட்டும்.

மாணவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயங்களை உணர்ந்து, மக்களாட்சி மாண்புக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மதிப்பளித்து இந்திய அரசு, சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தர வேண்டும். மக்களாட்சி, கூட்டாட்சி ஆகிய அடிப்படைக் கூறுகளைக் கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காத்திட, மாணவர்களுடன் ஒட்டுமொத்த இந்தியா கைகோர்த்து நிற்கிறது.

கட்டுரையாளர்: கல்வி செயற்பாட்டாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in