திமுக அரசை வம்படியாய் சீண்டுகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?

திமுக அரசை வம்படியாய் சீண்டுகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?
ஓவியம்: வெங்கி

சிறிய இடைவெளிக்குப் பின்னர், ஆளும்கட்சியினர் உடனான ஆளுநர் ஆர்.என்.ரவியின் மோதல் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.

தமிழகத்தில் அதிகம் சீண்டப்படாத சனாதன சர்ச்சையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதன் தொடர்ச்சியாக அமைச்சர் உதயநிதியை மையமிட்ட சனாதன சர்ச்சை ஓய்ந்திருக்கும் சூழலில், ஆர்.என்.ரவி புதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டு வருகிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தியாகிகள் விவகாரம், என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம், ஆரியம் - திராவிடம் மோதல் விவகாரம், டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் முட்டுக்கட்டை ஆகியவற்றோடு தமிழகத்தில் சாதியப் பாகுபாடுகள் அதிகரிப்பு குற்றச்சாட்டுகள்... என ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் விமர்சனங்கள் ஆளும்கட்சியான திமுகவை அனலாக கொதிக்கவைத்திருக்கிறது.

சங்கரய்யா மற்றும் சைலேந்திரபாபு சர்ச்சைகள்

தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரையில் கல்லூரி படிப்பை பாதியில் துறந்தவர் என்.சங்கரய்யா. நாட்டின் விடுதலைக்காகவும், அதன் பிறகாகவும் பல்வேறு உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டு 8 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்தவர். சிபிஐ கட்சியிலிருந்து சிபிஎம் உருவாகக் காரணமானவர்களில் ஒருவர்.

சிபிஎம் தோழர்களுடன் சங்கரய்யா...
சிபிஎம் தோழர்களுடன் சங்கரய்யா...

தற்போது 101 வயதாகும் சங்கரய்யாவுக்கு, அவரது அரசியல் மற்றும் சமூக பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு அண்மையில் தகைசால் விருது வழங்கியது. அவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவும் முடிவானது. ஆனால், அதற்கான கோப்பில் கையெழுத்திட மறுப்பதாக, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சீற்றம் கண்டுள்ளன.

இதே போன்று, முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கும் ஒப்புதல் வழங்காது இழுத்தடித்து வருகிறார் ஆளுநர். இந்த விவகாரத்தில், அதிமுக ஆட்சி காலத்தில் டிஎன்பிஎஸ்சி நியமனம் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறு, திடமான காரணத்தை முன்வைத்திருக்கிறார் ஆளுநர். டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் ஆளுநருக்கு ஆதரவு தெரிவிப்போர் கூட, சங்கரய்யா விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாட்டை ஆட்சேபிக்கவே செய்கிறார்கள்.

விடுதலை வீரர்கள் மற்றும் சாதிய சாடல்

தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை சாதியத் தலைவர்களாக்கியதான குற்றச்சாட்டு, அண்மையில் ஆளுநர் எழுப்பிய சர்ச்சைகளில் முக்கியமானது. இதனையொட்டி முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மருது பாண்டியர் நினைவஞ்சலியை முன்வைத்து ஆளுநர் எழுப்பிய விவாதங்கள் மேம்போக்கில் நியாயமாக தோன்றக்கூடும். ஆனால், ஒட்டுமொத்தமாக தமிழகம், அதன் ஆட்சியாளர்கள் மற்றும் தமிழ் மக்களை குறைகாணும் அவரது விமர்சனம், அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கு அடித்தளமிட்டு வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இதே போக்கில் தமிழகத்தை சாதியப் பாகுபாடுகள் நிறைந்த மாநிலமாக ஆளுநர் தொடர்ந்து சித்தரித்து வருவதும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறது. வேங்கைவயலில் குடிநீரில் மலத்தைக் கலந்தது மற்றும் நாங்குநேரியில் பட்டியல் சமுதாய மாணவரை சக மாணவர்கள் வீடுபுகுந்து வெட்டியது குறித்தெல்லாம் ஆளுநர் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த பட்டியலில் திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சியின் பட்டியலின பெண் தலைவர் பதவியேற்க முடியாததையும் புதிதாக சேர்த்திருக்கிறார்.

இந்த விவகாரங்களில் அரசு எடுத்திருக்கும், எடுத்துவரும் நடவடிக்கைகளை வசதியாக மறந்தவர், நாயக்கனேரி பின்னணியில் உயர்நீதிமன்ற உத்தரவையும் சட்டை செய்யவில்லை. இவற்றையெல்லாம் அமைச்சர் துரைமுருகன் எடுத்து விளக்கிய பிறகும், ஆளுநர் தனது கருத்துகளை திரும்பப்பெறவில்லை.

”தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் திட்டமிட்டு அவதூறு பரப்புரை செய்வது வேதனைக்கு உரியது. அரசியல் சட்டப் பதவியில் இருப்பவர், அரசியல் கட்சித் தலைவரைப்போலப் பேசி தமிழகத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல” என தனது பதிலடியில் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

சர்ச்சைகள் புதிதல்ல...

ஆளுநர் ஆர்.என்.ரவியை வட்டமிடும் சர்ச்சைகள் புதிதும் அல்ல. தமிழர் மற்றும் தமிழ் பண்பாட்டின் வரலாறு, மொழி, கலாசாரம், மாநில உரிமைகள் குறித்தெல்லாம் பெரிதாக ஆராயாது அவர் பேசியவை தொடர் சர்ச்சைக்கு ஆளாயின. அப்படியான அவரது சட்டப்பேரவை உரையின் பகுதிகள், அவைக்குறிப்பில் இருந்தும் அகற்றப்பட்டன.

ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் 40க்கும் மேலானவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டார்கள். அப்படி இருந்தும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்தார் ஆளுநர். இதுகுறித்து பல தரப்பிலும் கேள்விகள் எழுந்ததும், ”சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டிருந்தால், அந்த மசோதா நிராகரிக்கப்பட்டதாகவே பொருள். இதற்கு மேல் எப்படி நாகரிகமாகச் சொல்வது?” என்று பொதுவெளியில் ஆளுநர் பேசியது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் “நாட்டின் காப்பர் தேவையில் பெரும் பங்களித்துவந்த ஸ்டெர்லைட் ஆலையை, வெளிநாட்டு நிதியும், சதியுமாக மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர்” எனப் பேசியதும், போராட்ட மக்களை முகம்சுளிக்கச் செய்தது.

திருவள்ளுவர், வள்ளலார் போன்றோரை சனாதனத்தின் சார்பாக வரிந்துகொண்டது, கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்களின் தமிழ்த் தொண்டுக்கு உள்நோக்கம் கற்பித்தது, நீட் விவகாரம், புதிய கல்விக்கொள்கை, மும்மொழித் திட்டம் என மாணவ சமுதாயத்தின் எதிர்காலம் சார்ந்தவற்றிலும் அரசியல்வாதிகளுக்கு இணையாக சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்தது என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுகவினர் வாசிக்கும் பட்டியல் நீளமானது.

இந்தச் சூழலில், ரவுடி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டை வீசிய விவகாரத்திலும் ஆளுநர் - அரசுக்கான மோதல் வில்லங்கப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

கருக்கா வினோத்
கருக்கா வினோத்

எதிர்வரும் மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் ஆளுநரின் குடைச்சல் மேலும் அதிகரிக்கக்கூடும் என திமுகவினர் கணிக்கிறார்கள். ’ஆளுநர் மாளிகையே… அடக்கிடு வாயை...’ என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு சீறிய நாளில், கருக்கா வினோத் என்ற போதை ரவுடி, ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசி பிடிபட்டிருக்கிறார். வினோத் வீசியதும், கைவசம் கொண்டுவந்த இதர பெட்ரோல் குண்டுகளும் நல்வாய்ப்பாக வெடிக்கவில்லை. ஆனால், மாளிகைக்கு உள்ளிருந்து ஆளுநர் வீசும் அரசியல் குண்டுகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தவே செய்கின்றன!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in