ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியைச் சீர்குலைக்கும்: அரசு மேல்முறையிட மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்  அமைதியைச் சீர்குலைக்கும்: அரசு மேல்முறையிட மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

ஆர்எஸ்எஸ் பேரணிக்குத் தடைவிதிக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 9-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் 7 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. நாங்கள் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள் என்றெல்லாம் தவறான வாதத்தை வைத்து அக்டோபர் 2 அன்று பேரணி நடத்த அனுமதியும் பெற்றுள்ளனர்.

இந்திய அரசியலில் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்எஸ்எஸ். இவர்கள் ஒருபோதும் அரசியல் சட்டத்தை மதித்து நடந்ததே இல்லை என்பது கடந்த கால வரலாறு. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நீதிமன்றம் இந்த பேரணிக்கு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த ஆர்எஸ்எஸ் இயக்கம் அவரது பிறந்த நாளில் பேரணி செல்வது என்பது மாபெரும் வரலாற்றுப் பிழை. தமிழகம் மிகப்பெரும் அமைதிப் பூங்காவாக இந்தியாவிற்கு சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாகத் திகழக்கூடிய மாநிலம். அந்த அமைதியைச் சீர்குலைக்கும் முயற்சியைத் தான் ஆர்எஸ்எஸ் இந்த பேரணி வாயிலாகச் செய்ய முயற்சி செய்கிறது.

மதவெறி மற்றும் பிரித்தாளும் சூழ்ச்சி போன்றவற்றால் இந்தியத் திருநாட்டில் பல்வேறு வன்முறைகளை நிகழ்த்தியுள்ள ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்குத் தமிழகத்தில் பேரணி நடத்த அனுமதி வழங்கி இருப்பதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் வாயிலாகக் கொள்கை ரீதியாகத் திராவிட இயக்க சிந்தனையில் எழுச்சியுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழகத்திற்குப் பாசிச சிந்தனை கொண்ட ஆர்எஸ்எஸ்சின் இந்தப் பேரணி பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தமிழகம் அமைதி பூங்கா தான் என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும், முற்போக்கு இயக்கங்கள் அனைவருக்கும் உள்ளதென்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in