
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்து வருவதற்கு எதிராகவும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட கோரியும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்குத் தொடர்ந்துள்ளது.
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் 19 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளிட்ட மசோதாக்கள் இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பொறுப்பு ஏற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டியில் “நான் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்து இருக்கிறேன் என்று சொன்னால் அது நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம்” என்று சொல்லியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட வணிகவரித்துறையின் சமாதானம் திட்டம், டாஸ்மாக் மதுவிலை உயர்வு மசோதா உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.