
டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்துமாறு அரசு மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோயின் பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த போதும், டெங்கு பரவலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.
இதன் காரணமாக ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கி இருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சல் பரவலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகளையும், படுக்கைகளையும் தயாராக வைக்குமாறு அரசு மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட வலியுறுத்தியுள்ள அவர், வீடுகள் தோறும் மருத்துவ கண்காணிப்பை முன்னெடுக்கவும், கொசு ஒழிப்பு பணிகளை கிராமங்கள், நகரங்களில் விரிவுபடுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.