மதுரையில் நாளை தொடங்குகிறது மார்க்சிஸ்ட் மாநில மாநாடு

புத்தகக் காட்சி, வரலாற்றுப் படக்கண்காட்சிக்கும் ஏற்பாடு
மதுரையில் நாளை தொடங்குகிறது மார்க்சிஸ்ட் மாநில மாநாடு
மாநாடு நடைபெறும் மதுரை ராஜா முத்தையா மன்றம்படம்: கே.கே.மகேஷ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு மதுரையில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலையில் தமிழ்ச் சமூகத்தில் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றுப் படக்காட்சியும், சிறப்பு புத்தகக் காட்சியும் திறக்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23-வது மாநாடு மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையொட்டி மதுரை மாவட்டத்தில் சுமார் ஆயிரம் இடங்களில் கட்சிக் கொடியேற்ற நிகழ்ச்சியை நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர், இன்று நகரின் முக்கிய ரவுண்டானாங்களில் எல்லாம் செங்கொடியையும், அரிவாள் சுத்தியல் நட்சத்திர தோரணங்களையும் கட்டியுள்ளனர். மதுரை மாநகருக்குள் நுழையும் இடங்களில் எல்லாம் பெரிய பதாகைகளையும் வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக மாநாடு நடைபெற இருக்கும் மதுரை ராஜா முத்தையா மன்றத்தைச் சுற்றிலும் ஏராளமான செங்கொடியும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு வளாகத்திற்கு மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் கோ.வீரய்யன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் ராஜமுத்தையா மன்ற குளிரூட்டப்பட்ட அரங்கிற்கு, மறைந்த தலைவர்கள் கே.வரதராசன், ஏ.அப்துல் வகாப், தே.லட்சுமணன், கே.தங்கவேல் ஆகியோரது பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

வரலாற்றுக் கண்காட்சியும், புத்தகக் காட்சியும் நடைபெறும் இடம்.
வரலாற்றுக் கண்காட்சியும், புத்தகக் காட்சியும் நடைபெறும் இடம்.படம்: கே.கே.மகேஷ்

புத்தகக் காட்சி

ராஜமுத்தையா மன்ற வளாகத்திற்குள்ளேயே (உணவுக்கூடம் அருகே) மறைந்த முதுபெரும் தலைவர் மைதிலி சிவராமன் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நினைவரங்கில், தமிழ்ச் சமூகத்தில் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்று கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே பந்தலில், எழுத்தாளர் தோழர் என்.ராமகிருஷ்ணன் பெயரில் அமைந்துள்ள நினைவரங்கில் புத்தகக் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலையில் இவற்றை கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள் தலைமையில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி திறந்து வைக்கிறார்.

வாழை மரங்களுடன் வரவேற்கும் மாநாட்டு நுழைவுப்பாதை.
வாழை மரங்களுடன் வரவேற்கும் மாநாட்டு நுழைவுப்பாதை.படம்: கே.கே.மகேஷ்

பொது மாநாடு

மாநில மாநாட்டின் பொது மாநாடு நாளை (புதன்கிழமை) காலை 8 மணி அளவில் இசை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. 9 மணி அளவில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் செங்கொடியை ஏற்றிவைக்கிறார். அதைத்தொடர்ந்து 9.30 மணியளவில் நடைபெறும் பொது மாநாட்டிற்கு மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையேற்கிறார். வரவேற்புக்குழுத் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் அஞ்சலித் தீர்மானம் முன்மொழிகிறார். மாநாட்டைத் துவக்கி வைத்து கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றுகிறார்.

மாநாட்டில் பங்கேற்குமாறு, கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க காலத்தில் இருந்தே அதில் பணியாற்றும் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. வயோதிகம் காரணமாக, அவர் வாழ்த்துச் செய்தி மட்டுமே கொடுத்துள்ளார். அந்த காணொலி பதிவும் மாநாட்டில் ஒளிபரப்பப்படுகிறது.

மாநாட்டு மேடை
மாநாட்டு மேடைபடம்: கே.கே.மகேஷ்

பிரதிநிதிகள் மாநாடு

அதைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் பிரதிநிதிகள் மாநாடு தொடங்குகிறது. தலைமைக்குழு மற்றும் மாநாட்டுக்குழுக்கள் தேர்வுக்குப் பின்னர் கட்சியின் அரசியல் - அமைப்பு -வேலை அறிக்கையை சமர்ப்பித்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து பிரதிநிதிகள் விவாதம் துவங்குகிறது.

இதில் கோயில் விழாக்களில் காவிக்கொடியை கட்டி இந்து மதம் என்றாலே நாங்கள்தான் என்றும் சொல்லிக்கொண்டும், திருவிழாக்களைக்கூட வெறுப்பு அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டும் இருக்கிற பாஜகவுக்கு எதிராக பண்பாட்டுத் தளத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி வேலை பார்ப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது. இனி கோயில் விழாக்களில் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் என்று ஏற்கெனவே மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் அறிவித்திருப்பதால், அதுபற்றிய விவாதமே பிரதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மாநாட்டையொட்டி மதுரையின் நுழைவுப் பகுதிகளில் ஒன்றான திருச்சி நான்குவழிச்சாலை ஒத்தக்கடை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்.
மாநாட்டையொட்டி மதுரையின் நுழைவுப் பகுதிகளில் ஒன்றான திருச்சி நான்குவழிச்சாலை ஒத்தக்கடை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்.படம்: கே.கே.மகேஷ்

பொதுக்கூட்டம்

நாளை மாலை 4 மணி அளவில் மதுரை காளவாசலில் இருந்து, செந்தொண்டர் அணிவகுப்பு புறப்படுகிறது. அதனை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். அதன் நிறைவாக பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் அமைந்துள்ள தோழர் என்.நன்மாறன் திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

Related Stories

No stories found.